Sep 10, 2010

யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்வு : டில்லியில் வெள்ள அபாயம்

தொடர் மழை காரணமாக யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து டில்லியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரியானாவில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனையடுத்து அங்கு ஆறுகள் மற்றும் குளங்கள் நிரம்பி வழிகின்றனர். அணைகளும் நிரம்பி வழிகின்றன.

எனவே, அரியானா அரசு அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றி வருகிறது.

இன்று ஒரே நாளில் மட்டும் 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.60 மீட்டர் ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் ஒரு மீட்டர் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டால் டில்லியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. யமுனை ஆறு டில்லி வழியாகவே ஓடுகிறது.

எனவே தாழ்வான பகுதியில் குடியிருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ள நிலைமையைச் சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை டில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் தெரிவித்தார்.

இதற்கிடையே, தாழ்வான பகுதிகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்ற யமுனை ஆற்றங்கரையில் 100 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என வெள்ளக் கட்டுப்பாடு அமைச்சர் ராஜ்குமார் சவுகான் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 நாட்களில் அரியானா அரசு சுமார் 9 லட்சம் கன அடி தண்ணீரைத் திறந்து விட்டுள்ளது. அதில், 3 லட்சம் கன அடி தண்ணீர் டில்லியை வந்தடையும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

எனவே, வெள்ளத் தடுப்பு, முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த மாதமும் யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தது.

தாழ்வான பகுதியில் தங்கியிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

No comments:

Post a Comment