Sep 7, 2010

அதிபர் அதிகாரத்தை குறைக்க சட்டம்: ராஜபக்ஷே கருத்து







அதிபர் பதவிக்குள்ள சில அதிகாரங்களை குறைக்கும் விதமாகத் தான், 18வது அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது' என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்தார்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷே, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இலங்கையில் தொடர்ந்து இரண்டு முறை அதிபர் பதவி வகித்தவர், மூன்றாவது முறை பதவியேற்பதற்கு, 18வது அரசியல் அமைப்பு சட்டம் தடையாக உள்ளது. மூன்றாவது முறையாக ஒருவரை அதிபராக பதவியில் அமர்த்த மக்கள் விரும்பினால், அதற்கு இந்த சட்டம் தடையாக உள்ளது. இதனால், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. மேலும், அதிபர் பதவிக்குள்ள சில முக்கிய அதிகாரங்களை குறைப்பதும், இந்த சட்ட திருத்தத்தின் நோக்கம். சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம், அதிபருக்கு உள்ள சில முக்கிய அதிகாரங்கள் குறையும். எனக்கு பின், என் மகன் நமல் ராஜபக்ஷே அதிபர் ஆவாரா என, கேட்கப்படுகிறது. என்னை பொறுத்தவரை குறுக்கு வழியில் யாரும் பதவிக்கு வர முடியாது. நான் அதிபர் பதவியில் அமர்வதற்கு 40 ஆண்டுகள் தேவைப்பட்டது. 23 வயதாக இருக்கும்போது, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டேன். அதிபர் பதவி என்பது நூறு மீட்டர் ஓட்டப் பந்தயம் அல்ல. இவ்வாறு ராஜபக்ஷே கூறினார்.

சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்: இதற்கிடையே, அதிபர் பதவியில் மூன்றாவது முறையாக ஒருவர் நீடிப்பது தொடர்பான வழக்கு, இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "இலங்கை அரசு கொண்டு வரவுள்ள சட்ட திருத்தம், அரசியல் அமைப்பு சட்டத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. இதற்கு என தனியாக இந்த விஷயத்தில் மட்டும் பொதுமக்கள் ஓட்டெடுப்பு என்பது தேவையில்லை. பார்லிமென்டில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால், சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றலாம்' என, உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த சட்ட திருத்த மசோதா தொடர்பான விவாதம் இலங்கை பார்லிமென்டில் இன்று நடக்கவுள்ளது.

No comments:

Post a Comment