Sep 8, 2010

பெண்களுக்கு வீட்டு வேலை வாய்ப்பா? சவுதி, குவைத் சென்றால் ஆபத்து நிச்சயம்


ஜெட்டா: சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்யும் ஆசிய பெண்கள் பல்வேறு கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.

சவுதி அரேபியாவில் 80 லட்சம் வெளிநாட்டினர் உள்ளனர். இவர்களில் நான்கு லட்சம் பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலோர் வீட்டு வேலை செய்து வருகின்றனர். சவுதியில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் அனுபவிக்கும் கொடுமை கொஞ்சநஞ்சமல்ல. வேலைக்கு சேர்ந்ததும் தங்கள் பாஸ்போர்ட்டை வீட்டு எஜமானரிடம் ஒப்படைத்து விடவேண்டும். வயிற்று பிழைப்புக்காக சவுதி செல்லும் ஆசிய பெண்கள் பலர், தினசரி எஜமானர்களின் வசைமொழிகளையும், அடி, உதைகளையும் வாங்க வேண்டியுள்ளது. இன்னும் பல இடங்களில் எஜமானர்களின் செக்ஸ் தொல்லைக்கு பெண்கள் பலியாக நேரிடுகிறது. இந்த கொடுமை தாங்காமல் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆறு மாதங்களுக்கு முன், இலங்கையைச் சேர்ந்த அரியாவதி(49) என்ற பெண், சவுதியில் வீட்டு வேலை செய்ய சென்றார். மூன்று குழந்தைகளுக்கு தாயான இந்த பெண், வேலைக்கு சேர்ந்த நாள் முதல், எஜமானர்களின் வசை மொழிக்கு ஆளானார்.

ஒரு நாள் கண்ணாடி தட்டை உடைத்துவிட்டதற்காக, முதலாளி இவரது நெற்றியில் ஆணியை அறைந்தார். ஒவ்வொரு முறை தவறு செய்யும் போதும் ஒவ்வொரு ஆணி இவர் உடலில் சூடு படுத்தி இறக்கப்பட்டது. இப்படியாக 24 ஆணிகள் இவர் உடலில் செலுத்தப்பட்டன. இந்த கொடுமையை தாங்க முடியாமல் வேலையை பாதியில் விட்டு விட்டு தாயகம் திரும்பினார் அரியாவதி. இதே போன்ற கொடுமைகளை ஆயிரக்கணக்கான பெண்கள் நித்தம் நித்தம் அனுபவித்து வருகின்றனர். இதற்கு அந்நாட்டு அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க முன்வரவில்லை. அரியாவதி மீது நடந்த கொடுமைகளை இலங்கை தூதரக அதிகாரிகள் சவுதி அதிகாரிகளிடம் சுட்டி காட்டியபோது இது போன்ற கொடுமைகள் நடக்கவேயில்லை என, சாதித்து விட்டது சவுதி அரசு. மாறாக அரியாவதி, "பிளாக் மெயில்' செய்வதாக அவர் மீதே புகாரை சுமத்தியது.

ஒவ்வொரு நாளும் 10 பெண்கள், எஜமானரின் கொடுமை தாங்காமல் வேலை செய்யும் வீட்டை விட்டு ஓடிவிடுவதாக இலங்கை தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வளைகுடா நாடுகளில் பெரும்பாலும் இது போன்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஜோர்டான், குவைத், லெபனான், அபுதாபி போன்ற பகுதிகளிலும் இதே போன்ற கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும், சவுதியில் தான் அதிகபட்சமாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. வீட்டு வேலை செய்பவர்களுக்கு இவ்வளவு நேரம் தான் பணி என்பது கிடையாது. காலை முதல் நள்ளிரவு வரை வேலைகள் தொடர்கின்றன. இவர்களுக்கு பேசியபடி ஊதியமும் முறையாக தரப்படுவதில்லை.

சவுதியில் வேலை செய்த இந்தோனேசிய பெண், கால் விரல்கள் துண்டிக்கப்பட்டு குளியலறையில் கட்டி போடப்பட்ட நிலையில் கிடந்தார் என, அந்நாட்டு பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை கண்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(26) என்பவர் இந்த ஆண்டு துவக்கத்தில் சவுதி சென்றார். ஆனால், ஒரு சில மாதங்களில் அவர் உடலில் ஏராளமான சூடு போட்ட தழும்புகளுடன் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. வெளிநாட்டு தொழிலாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. எனவே, இந்த நாட்டில் வீட்டு வேலை செய்யும் பணிக்கு செல்லாதீர்கள் என இலங்கை, இந்திய, நேபாள அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாஸ்போர்ட்டை தங்கள் வசமே வைத்து கொள்ளவும், நினைத்த நேரத்தில் அந்த நாட்டை விட்டு கிளம்பவும் உரிமை உள்ளது. எனவே, சவுதி அரசு இதற்கு ஏற்ப தங்கள் நாட்டு சட்டத்திட்டங்களை சீரமைக்க வேண்டும் என, மனித உரிமை அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன.

No comments:

Post a Comment