Oct 7, 2010

பிரபுதேவா-நயன்தாரா 19-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு






சென்னை, அக்.6: சென்னையிலுள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் பிரபுதேவா, நடிகை நயன்தாரா ஆகியோர் அக்டோபர் 19-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரபுதேவாவின் மனைவி ரம்லத் (எ) லதா தாக்கல் செய்த புதிய மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி ரம்லத் சென்னையிலுள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையிலுள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜராகி அவர் தாக்கல் செய்த புதிய மனு விவரம்:

எனது கணவர் பிரபுதேவாவை என்னுடன் சேர்த்து வைக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தேன். இந்த நிலையில், எனது கணவரும், நயன்தாராவும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தெரியவருகிறது.

அவருடனான திருமண பந்தம் இப்போதும் நீடிக்கிறது. இந்த நிலையில், பிரபுதேவா 2-வது திருமணம் செய்துகொண்டால் நானும், எங்களது குழந்தைகளும் பாதிக்கப்படுவோம். எனவே, பிரபுதேவா, நயன்தாரா ஆகியோர் டிசம்பரிலோ அல்லது இந்த வழக்கு முடியும் வரையிலோ திருமணம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். அதேபோல், அவர்கள் இருவரும் இணைந்து பத்திரிகைகளுக்கு பேட்டியோ, புகைப்படமோ அளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரினார்.

இந்த மனு சென்னையிலுள்ள குடும்ப நல முதன்மை நீதிபதி மீனாட்சி சுந்தரம் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, பிரபுதேவா, நயன்தாரா ஆகியோர் நீதிமன்றத்தில் அக்டோபர் 19-ம் தேதி நேரில் ஆஜராவதற்கு சம்மன் அனுப்புமாறு உத்தரவிட்டார். அன்றைய தினத்தில் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment