.jpg)
எளிமையின் கலைஞன் முரளியின் மறைவால் ஏற்பட்ட சுவடுகள் ஆறுவதற்குள் பின்னனிப்பாடகி ஸ்வர்ணலதாவின் மரணம் திரையுலகை அதிச்சியில் ஆழ்த்தியது. இப்போது தமிழ்திரையிசை உலகின் சாதனையாளர்களில் ஒருவரான சந்திரபோஸும் சிறுநீரக கூட்டு செயலிழப்பு காரணமாக இன்று காலமானார்.
சென்னை மயிலாப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்த அவருக்கு வயது 57.
362 படங்களுக்கு இசையமைத்தவர் சந்திரபோஸ். இதில் ரஜினி நடித்த மனிதன், ராஜா சின்னரோஜா உள்ளிட்ட ஏவி.எம்.மின் தயாரிப்பில் வந்த 12 படங்களும் அடங்கும். 1977-ல் தொடங்கிய இவரது இசை சாம்ராஜ்யம் தொடர்ந்து 20 வருடங்களுக்கும்மேலாக நிலைத்தது.
1978 இல் வெளியான “மச்சானைப் பார்த்தீங்களா” திரைப்படம் சந்திரபோஸுக்கு நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்திருந்தது. அதில் குறிப்பாக “மாம்பூவே சிறு மைனாவே” பாடல் காலத்தால் விஞ்சிய ஒரு தேன் விருந்தாக அமைந்தது. கே.பாலாஜியின் விடுதலை படத்தில் சந்திரபோஸின் இசை மறுபடியும் கலக்கியது. பொதுவாக இப்படியான மொழிமாற்றுப் படங்களிலே மூலப்படங்களின் பாடல்கள் முழுவதையுமே நகல் எடுப்பது வழக்கம். ஆனால் “விடுதலை” திரைப்படத்துக்காக விஷேஷமாக சந்திரபோஸால் மெட்டமைக்கப்பட்ட “நீலக்குயில்கள் ரெண்டு” பாடல் பெரிய ஹிட். அதற்கு பிறகு ஏவி.எம். நிறுவன படங்கள் அவருக்கு கிடைத்து.
எண்பதுகளில் ஏ.வி.எம் நிறுவனத்துக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்த திரைப்படம் சங்கர் குரு. அர்ஜீன, சீதாவுடன் பேபி ஷாலினி பாடிக் கொண்டே வரும் “சின்னச் சின்னப் பூவே” பாடலும் இப்பட வெற்றிக்குக் கைகொடுத்த சமாச்சாரங்கள் என்றால் வைரமுத்து வரிகளில் சந்திரபோஸ் இசையமைத்த “காக்கிச் சட்டை போட்ட மச்சான்” பாட்டு கூட இந்த வெற்றியில் பங்கு போட்டது.
ராஜா சின்ன ரோஜா படத்தில் சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா…, புதியபாதை படத்தில் பச்சபுள்ள அழுததுண்ணா…பாட்டி சொல்லை தட்டாதே படத்தில் டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லை தட்டாதே…, மனிதன் படத்தில் காளை காளை முரட்டு காளை நீதானா… என பல பாடல்கள் பெரிய ஹிட்.
இசையமைப்பாளராக இருந்த சந்திரபோஸ் நடிகராக மலர்கள் தொடரில் நடிக்க ஆரம்பித்தார். லிங்கம் என்கிற அவரது வில்லதனமான பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. டைரக்டர் தினேஷ் இவரை தனது கத்திக்கப்பல் படத்தில் மெயின் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்தார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வைரநெஞ்சம் தொடரில் மாமனார் வேடத்திலும், மெகா சேனலில் ஒளிபரப்பான யார் கண்ணன் இயக்கிய ஜனனம் தொடரில் வைத்தியராகவும் நடித்தார். அவர் ஒரு முறை அளித்த பேட்டியில்
“நடிக்கும் ஆசையில் தான் சினிமாத் துறைக்கே வந்தேன்.ஆனால் வெளிப்படுத்த முடிந்தது எனக்குள் இருந்த இசையைத்தான். 12 வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடிக்க வந்து விட்டேன். கலைஞர் நடித்த மணிமகுடம் நாடகத்தில் கூட நடித்திருக்கிறேன். கலைஞரின் பராசக்தி நாடகமாக நடந்தபோது அதிலும் நடித்திருக்கிறேன். என் நடிபபில் எனக்கே திருப்தி ஏற்பட்ட நேரத்தில் தான் சினிமாவுக்கு நடிக்க வந்தேன். எதிர்பாராமல் இசையமைப்பாளராகி, அதில் பிரபலமான நேரத்தில் நடிப்பு ஆசையை ஒத்தி வைத்தேனே தவிர, நடிப்பார்வம் உள்ளூர கனன்று கொண்டுதான் இருந்திருக்கிறது. அதுதான் இத்தனை வருடம் கழித்து மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
இசையமைப்பில் சாதித்ததையும் தாண்டி நடிப்பில் சாதிக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு எனக்குள் விதவித கேரக்டர்களாய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.” என்று சொல்லியிருந்தவர் சமீபத்தில் தனது மகனின் திருமனத்தை நடத்தி முடித்தார். மகன் திருமணத்துக்கு பிறகு ஒரு படத்தையும் இசையமைத்து இயக்க இருந்தாராம். இந்நிலையில் கடந்த 6 மாதமாகவே சிறுநீரகபிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து வந்ததாக குடுபந்தினர் தெரிவிக்கிரார்கள். சிலி தினங்களின் முன் அவரது உடல்நிலை மோசமாகிய போது, அவர் இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. எனினும் வைத்தியர்களின் தீவிர சிகிச்சையில் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியிருந்த அவர் இன்று காலமானார். சந்திரபோஸின் உடல் மைலாபூரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிகாக வைக்கப்படுள்ளது.
No comments:
Post a Comment