Oct 13, 2010

காஷ்மீர் பிரச்னை: ஐ.நா. சபையில் இந்தியா- பாகிஸ்தான் மோதல்


காஷ்மீர் பிரச்னை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொண்டன.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் இப்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில் காங்கிரஸ் எம்.பி. சரண் தாஸ் மகந்த் பேசினார். அப்போது, "காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி' என அவர் அடித்துக் கூறினார்.

"எங்களது எதிர்காலம் இந்தியாவுடன்தான்' என்ற தங்களது விருப்பத்தை காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பெரும்வாரியாக வாக்களிப்பதன் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர் என்று அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டு பிரதிநிதி தஹீர் அன்டரபி பேசினார். ஐ.நா. சபையின் தீர்மானத்துக்கு ஏற்ப காஷ்மீரில் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்படவிலைல என்று அவர் குற்றம்சாட்டினார். ஜம்மு, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்றார் அவர்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கடந்த வாரம் பேட்டியளித்திருந்தார். காஷ்மீர் பிரச்னைக்கு சுமுகத் தீர்வுகாண ஐ.நா. உதவ வேண்டும் என்று இரு தரப்பிலும் (இந்தியா- பாகிஸ்தான்) கோரினால் மட்டுமே அந்தப் பிரச்னையில் தலையிட்டு சுமுக தீர்வு காண உதவலாம் என்று அவர் கூறினார்.

எந்தவொரு பிரச்னையிலும் நல்லெண்ண அடிப்படையில் ஐ.நா. தலையிட வேண்டும் என்றால் இருதரப்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட வேண்டும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் தெற்காசிய பகுதியில் முக்கியமான நாடுகள். இந்த இரு நாடுகளிலும் அமைதி நிலவ வேண்டியது அவசியம் என்று மூன் கூறினார்.

அண்மைக்காலமாக காஷ்மீரில் பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்தி வருவதால் தைரியமடைந்த பாகிஸ்தான், சர்வதேச அரங்குகளில் காஷ்மீர் பிரச்னையைத் தொடர்ந்து எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment