
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் குழுவில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா இடம் பிடித்துள்ளது.
இது தொடர்பாக நியூயார்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐ.நா. சபைக் கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 191 உறுப்பு நாடுகளில் 187 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்தன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா ஏற்கெனவே 6 முறை இடம் பெற்றுள்ளது. ஆனால், 1992-க்குப் பின்னர் இந்தக் குழுவில் இந்தியா இடம்பெறவில்லை.
ஐ.நா. பொது சபை மாநாட்டில் பங்கேற்க கடந்த மாதம் நியூயார்க் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, 56 நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார். இதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். ஐ.நா. பாதுகாப்பு குழுவில் ஆசியாவுக்கான பிரிவில் இந்தியாவுக்கும், கஜகஸ்தானுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் கடந்த டிசம்பரில் கஜகஸ்தான் போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. இதனால் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.
ஆப்பிரிக்காவுக்கான பிரிவில் தென் ஆப்பிரிக்காவும், லத்தீன் அமெரிக்க- கரிபீயன் நாடுகளுக்கான பிரிவில் கொலம்பியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. மேற்கு ஐரோப்பா- இதர நாடுகள் பிரிவில் 2 இடங்கள் உள்ளன. இதில் ஓர் இடத்துக்கு ஜெர்மனி வெற்றி பெற்று விட்டது.
மற்றொரு இடத்துக்கு போர்ச்சுகல், கனடா இடையே கடும் போட்டி நிலவியது. வாக்கெடுப்பில் போர்ச்சுகலுக்கு 113 நாடுகளும், கனடாவுக்கு 73 நாடுகளும் ஆதரவு அளித்தன. உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட 127 நாடுகளின் ஆதரவு தேவை. எனவே, போட்டியிலிருந்து கனடா விலகிக் கொண்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் 150 வாக்குகள் பெற்று போர்ச்சுகல் வெற்றி பெற்றது.
புதிய உறுப்பு நாடுகள் 2011 ஜனவரி 1 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பதவியில் நீடிக்கும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில், அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் பிரிவில் வாக்கெடுப்பு மூலம் 10 உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டு காலியான 5 இடங்களுக்கு இப்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புதிய உறுப்பு நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
எஸ்.எம். கிருஷ்ணா: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
உலக அளவில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஐ.நா. சபையின் அமைதிப் பணிகளில் தீவிரமாக பணியாற்றுவோம். பிரச்னைக்குரிய அண்டைநாடுகள் நடுவே அமைந்துள்ள இந்தியா, முதற்கட்டமாக இந்தப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளும்.
191 நாடுகளில் 187 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. ஐ.நா. சபையில் இந்தியாவுக்கு ஆதரவு அதிகரித்து வருவதையே இந்த வாக்கெடுப்பு உணர்த்துகிறது. இதன் மூலம் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறுவதற்கு ஒரு படி முன்னேறியுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment