Oct 14, 2010

ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியா அதிகபட்ச ஆதரவுடன் அங்கீகாரம்



ஐ.நா., பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆக்கபூர்வமாக செயல்படும் என, அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு சபையில் மொத்தமுள்ள 15 இடங்களில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் மட்டுமே நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. மற்ற 10 நாடுகள் இரண்டு ஆண்டு கால சுழற்சி முறையில் இந்த சபையில் அங்கம் வகித்து வருகின்றன. இந்த சபையில் நிரந்தர அந்தஸ்து கேட்டு பிரேசில், ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.

இந்நிலையில், கடந்த 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சபையில் இந்தியா மீண்டும் தற்காலிக உறுப்பு நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளின் சார்பில் கஜகஸ்தானும், இந்தியாவும் இந்த முறை போட்டியிட்டன. ஆனால், இந்த ஆண்டு துவக்கத்தில் கஜகஸ்தான் இந்த போட்டியிலிருந்து விலகிக்கொண்டதால் இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. 191 உறுப்பு நாடுகளில், 187 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தன. கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த இம்மாதிரியான ஓட்டெடுப்பில் இவ்வளவு அதிகமான நாடுகள் ஒரே மாதிரி ஆதரவு தெரிவித்தது இல்லை. ஆப்ரிக்க நாடுகளின் சார்பில் தென் ஆப்ரிக்காவும், தென் அமெரிக்க நாடுகளின் சார்பில் கொலம்பியாவும், ஐரோப்பிய நாடுகளின் சார்பில் ஜெர்மனியும், போர்ச்சுகலும் தேர்வாகியுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இரண்டு ஆண்டு காலத்துக்கு இந்த நாடுகள் பாதுகாப்பு சபையில் உறுப்பு நாடாக இருக்கும். கடந்த 92ம் ஆண்டு முன்பு இந்தியா ஆறு முறை ஐ.நா., பாதுகாப்பு சபையில் உறுப்பு நாடாக இருந்துள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள இந்தியா, தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படும் என, வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி பி.ஜெ.க்ரோலே குறிப்பிடுகையில், "பாதுகாப்பு கவுன்சிலில் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியா, ஜெர்மனி,போர்ச்சுகல், தென் ஆப்ரிக்கா, கொலம்பியா ஆகிய நாடுகள் ஆக்கபூர்வமாக செயல்படும் என நம்புகிறேன். சர்வதேச பிரச்னைகளை தனியொரு நாடு தீர்க்க முடியாது. எனவே, சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு இந்த நாடுகள் உறுதுணையாக இருக்கும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த ஒபாமா அரசு விரும்புகிறது. இந்தியாவை போல ஒவ்வொரு நாடும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக முயற்சிக்கின்றன. ஐ.நா.,வின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த விஷயத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.

No comments:

Post a Comment