Oct 13, 2010

கழிவுநீர் கடலில் கலப்பதை கண்டித்து திருவொற்றியூர் நகராட்சி அலுவலகம் எதிரில் நாளை ஆர்ப்பாட்டம்; ஜெயலலிதா அறிக்கை




அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையை ஒட்டியுள்ள, திருவொற்றிஸிர், எண்ணூர் பகுதிகளில் உள்ள நல்ல தண்ணீர் ஓடை குப்பம், லட்சுமிபுரம், திருச்சினாங்குப்பம், புதுநகர் குப்பம், ஒண்டிகுப்பம், திருவொற்றியூர் குப்பம், பலகைத் தொட்டிகுப்பம், காசி விஸ்வநாதர் கோயில் குப்பம், காசி விசாலாட்சி கோயில் குப்பம், பெரியகாசி கோயில் குப்பம், இந்திராகாந்தி குப்பம், எர்ணாவூர் குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவார குப்பம், காட்டுக் குப்பம், சிவன் படைவீதி போன்ற கிராமங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்கள் மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுத் தன்மை கொண்ட ரசாயனம் கலந்த கழிவு நீரை குழாய் மூலம் கொண்டு வந்து கடலில் கலந்தால் மீன் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும் என்றும், மீன்கள் செத்து மடிகின்ற சூழ்நிலை உருவாகும் என்றும், மீன்பிடி வலைகள் அறுந்து நாசமாகிவிடும் என்றும், மீன்பிடி தொழில் முற்றிலுமாக தடைபட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத, தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக இதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அ.தி.முக. திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் நகரக் கழகத்தின் சார்பில், நாளை (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில், திருவொற்றியூர் நகராட்சி அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக இலக்கிய அணித் தலைவர் பழ. கருப்பையா தலைமையிலும், கழக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால், எம்.பி., திருவள்ளூர் மாவட்டக் கழகச் செயலாளர் வி.மூர்த்தி, கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பி.பலராமன் மற்றும் திருவொற்றியூர் நகரக் கழகச் செயலாளர் கே.குப்பன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment