Oct 1, 2010

அயோத்தி தீர்ப்பு : இந்து மகா சபா, முஸ்லிம் சன்னி வக்பு வாரியம் எதிர்ப்பு




அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து, அதை இந்து, முஸ்லிம் அமைப்புகளுக்கு வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக இந்து மகா சபாவும், முஸ்லிம் சன்னி வக்பு வாரியமும் அறிவித்துள்ளன.

அதே நேரத்தில் இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக பாஜக, ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை அறிவித்துள்ளன.

அது போன்றே தீர்ப்பை எதிர்த்து அவசரப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதில்லை என்று பாபர் மசூதிக் கமிட்டி அறிவி்த்துள்ளது.

இந்த நிலத்தின் ஒரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், அதே நேரத்தில், மசூதி இருந்த மொத்த இடமும் தங்களுக்கே சொந்தம் என்று கூறிய முஸ்லிம் சன்னி வக்பு வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இந்த இடம் முழுவதையும் தங்களிடமே தர வேண்டும் என்று கோரிய, அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதே நேரத்தில் இந்த இடத்தில் 3இல் ஒரு பங்கு இடத்தை மட்டும் இந்த அமைப்பிடம் தர உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தங்களுக்கு 90 சதவீத வெற்றியே கிடைத்திருப்பதாகவும், பாபர் மசூதி கமிட்டிக்கு 3இல் ஒரு பங்கு இடத்தைத் தர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் இந்து மகா சபா அறிவித்துள்ளது.

யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை

ஆனால், இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது யாருக்கும் வெற்றி-தோல்வி இல்லை என்றும், இதை அனைவருமே மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்,

"ராமர் கோயில் கட்டுவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தீர்ப்பு வழி ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பால் யாருக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. ராமர் கோயில் கட்டுவதற்கு முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்" என்றார்.

தீர்ப்பை வரவேற்றுள்ள பாஜக செய்தித் தொடர்பாளரும், இந்து மகா சபாவுக்காக வாதாடிய வழக்கறிஞருமான ரவிசங்கர் பிரதாத், இந்தத் தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகாமல், அங்கு இந்துக்கள் கோவில் கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத்தும் தீர்ப்பை வரவேற்றுள்ளது.

ராமர் பிறந்த இடம் என்ற இந்துக்களின் நம்பிக்கை நீதித்துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை வரவேற்கிறோம் என்று அதன் பொதுச் செயலாளர் பிரவீண் தொகாடியா கூறினார்.

இதன் மூலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வழி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பாஜக அவசரக் கூட்டம்

இந்தத் தீர்ப்பையடுத்து பாஜக உயர்நிலைக் குழு கூட்டம் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் தலைமையில் இன்று இரவு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment