Nov 3, 2010

அணிலை குழந்தையாக வளர்க்கும் அதிகாரி ராமராக கருதி வழிபடும் பக்தர்கள்





சென்னை சந்தாமணி ஆர்.வி, நகரைச் சேர்ந்தவர் மோகணேஷ். தனியார் நிறுவன மேலாளராக உள்ளார். இவருக்கு மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.இவர் தனது வீட்டில் அணில் ஒன்றை குழந்தை போல வளர்த்து வருகிறார். அவர் எங்கு சென்றாலும் அணிலும் அவரது தோளில் தொற்றிக் கொள்கிறது.

அவர் உணவு கொடுத்தால்தான் சாப்பிடுகிறது. அவர் வெளியூர் சென்று விட்டால் எதையும் சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறது.

இதனால் இந்த அணிலை அவர் மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறார். அணில் ராமபிரான் வாகனம் என்பதால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று அதை வழி படுகிறார்கள். அணிலை பார்த்ததும் ராமரை நேரில் பார்த்ததாகவே கருதி மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகிறார்கள். இதுபற்றி மோகணேஷ் கூறியதாவது:-

நான் 4 ஆண்டுகளுக்கு முன்பு 3 அணில் குட்டிகளை வளர்த்தேன். அதில் 2 இறந்து விட்டன. தற்போது இந்த அணில் மட்டும்தான் உயிருடன் உள்ளது.

இதை நானும் குடும்பத்தினரும் குழந்தை போல வளர்த்து வருகிறோம். நாங்கள் என்ன சொல்கிறோமோ அதன்படி நடக்கும். அதற்கு எல்லாமே புரிகிறது.

தினமும் அணிலுக்கு உணவாக பால், ஆப்பிள், கேக், திராட்சை போன்றவற்றை கொடுக்கிறோம். கேக்கை விரும்பி ருசித்து சாப்பிடுகிறது. இதனால் தினமும் அணிலுக்காக ஒரு கேக் வாங்குகிறேன்.

அணிலுக்கு உடல்நிலை சரி இல்லாவிட்டால் எங்கள் குடும்பமே கவலையில் மூழ்கி விடும். உடனே அதை தூக்கிக் கொண்டு செல்லப்பிராணிகள் மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளிப்போம்.

அணில் ராமபிரானின் வாகனம் என்பதால் அக்கம் பக்கத்தினர் கூட்டமாக வந்து அதை பார்த்து வழி படுகிறார்கள். இதை பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

அணிலை நோய்க் கிருமிகள் தொற்றாமல் இருக்க வெந்நீரில் டெட்டால் கலந்து தினமும் அதை துணியில் நனைத்து துடைத்த விடுவோம்.

பெரும்பாலும் அணிலை அவ்வளவு எளிதில் பிடித்து விட முடியாது. வேகமாக ஓடும் தன்மை கொண்டது.

அப்படிப்பட்ட அணில் எங்களை விட்டு பிரியாமல் இருப்பது ராமபிரானின் அனுக்கிரகமாகத்தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment