கொழும்பு : இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் பிரிட்டன் சுற்றுப் பயணத்தின் போது ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இதையடுத்து, பிரிட்டன் வெளியுறவுத் துறை உயரதிகாரி, தனது இலங்கை சுற்றுப் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே, கடந்த வாரம் பிரிட்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, லண்டன் விமான நிலையம் முன் திரண்ட ஏராளமான தமிழர்கள், ராஜபக்ஷேவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது, போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, ராஜபக்ஷேவுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராஜபக்ஷேயின் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.
பிரிட்டனில் ராஜபக்ஷேவுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 3ம் தேதி, கொழும்பில் உள்ள பிரிட்டன் தூதரகம் முன், அரசு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இலங்கை வீட்டு வசதித் துறை அமைச்சர் விமல் வீரவன்சா தலைமையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பயங்கரவாதத்துக்கு ஆதரவாக பிரிட்டன் செயல்படுவதாகக் கூறி, அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இந்த சம்பவங்கள் காரணமாக, பிரிட்டன் - இலங்கை நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, பிரிட்டன் வெளியுறவுத் துறை துணைச் செயலர் அலஸ்டார் பட், தனது இலங்கை சுற்றுப் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார். இந்த வாரத்தில் அவர் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்வதாக இருந்தது.
இதுகுறித்து இலங்கையில் உள்ள பிரிட்டன் தூதரக இணையதளத்தில், "வெளியுறவுத் துறை செயலரின் சுற்றுப் பயண தேதியை மாற்றுவது குறித்து கடந்த சில வாரங்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment