Dec 28, 2010

வடகொரியாவுக்கு பதிலடி தர தென்கொரிய அதிபர் அழைப்பு

சியோல் : "வடகொரியாவுக்குப் பதிலடி கொடுப்பதற்கு ஒன்று திரளுங்கள்' என்று தென்கொரிய மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார், அந்நாட்டு அதிபர் லீ மியுங் பாக். தென்கொரிய தேசிய வானொலியில் நேற்றுப் பேசிய அவர் இதுகுறித்து கூறியதாவது: வடகொரியா இனிமேல் ஏதாவது ஒரு தாக்குதல் நடத்தினாலும், அதன் மீது இரக்கம் காட்டாமல் கடுமையாகத் தாக்குவோம். நமது நாட்டின் பாதுகாப்பு தற்போது ஒரு ஆபத்தான நிலையில் இருக்கிறது.

இந்த நேரத்தில், நமக்குள் வேறுபாடுகள் எழுவதை நாம் அனுமதிக்க முடியாது. நமது போர்க் கப்பல், வடகொரிய நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு அதில் இருந்தவர்களில் 46 பேர் உயிரிழந்த சம்பவம், நம்மில் பல்வேறு கருத்து வேறுபாடுகளை உண்டாக்கியது.

அந்தக் கருத்து வேறுபாடுகள் தான், இயான்பியாங் தீவு மீது வடகொரியா தாக்குதல் நடத்த வழிகாட்டி விட்டது. அதனால், நாம் ஒன்று திரண்டு நமது ஒற்றுமையைக் காட்டினால், வடகொரியா நம்மை எதிர்க்க அஞ்சும். நடந்த தாக்குதலுக்குச் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம். அதுதான் போரைத் தடுக்கும், அமைதியை நிலைநிறுத்தும். வடகொரியா உடனான அமைதியான இணக்கத்தையே இப்போதும் தென்கொரியா விரும்புகிறது. இவ்வாறு லீ மியுங் பாக் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தான், தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம் க்வான் ஜின்னும், சீனப் பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங்லீயும் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம், சீனத் தலைநகர் பீஜிங்கில் சந்தித்து, இந்தப் பிரச்னை குறித்து பேசுவர் என்ற செய்தி வெளியானது.

No comments:

Post a Comment