Sep 10, 2010

கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி

கிழக்கு மாகாண சபை, அங்கு தொழில்வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு தொழில்பயிற்சிகளையும் உதவிகளையும் வழங்கி வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி நெறியை ஆரம்பித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சுமார் 30 இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி நெறி வழங்குவதற்கான அனுமதி அட்டையை கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் வழங்கினார்.

பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் கிரிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன கிராமிய மின்சார அமைச்சர் எம். எஸ் உதுமாலெவ்வே, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், கோரளைப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் தா. உதயஜீவதாஸ் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கௌரிதரன், அனுசரணையாளர்களான சேவாலங்கா அமைப்பின் பிரதிநிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கனவே இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தேவராஜ் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்வு : டில்லியில் வெள்ள அபாயம்

தொடர் மழை காரணமாக யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து டில்லியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரியானாவில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனையடுத்து அங்கு ஆறுகள் மற்றும் குளங்கள் நிரம்பி வழிகின்றனர். அணைகளும் நிரம்பி வழிகின்றன.

எனவே, அரியானா அரசு அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றி வருகிறது.

இன்று ஒரே நாளில் மட்டும் 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.60 மீட்டர் ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் ஒரு மீட்டர் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டால் டில்லியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. யமுனை ஆறு டில்லி வழியாகவே ஓடுகிறது.

எனவே தாழ்வான பகுதியில் குடியிருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ள நிலைமையைச் சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை டில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் தெரிவித்தார்.

இதற்கிடையே, தாழ்வான பகுதிகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்ற யமுனை ஆற்றங்கரையில் 100 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என வெள்ளக் கட்டுப்பாடு அமைச்சர் ராஜ்குமார் சவுகான் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 நாட்களில் அரியானா அரசு சுமார் 9 லட்சம் கன அடி தண்ணீரைத் திறந்து விட்டுள்ளது. அதில், 3 லட்சம் கன அடி தண்ணீர் டில்லியை வந்தடையும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

எனவே, வெள்ளத் தடுப்பு, முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த மாதமும் யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தது.

தாழ்வான பகுதியில் தங்கியிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியாவில் இன்று வெடிப்புச் சம்பவம் : 3 படையினர் காயம்

வவுனியாவிலுள்ள 211ஆம் படைப்பிரிவு தலைமையகத்தில் உள்ள களஞ்சியசாலையில் இன்று ஏற்பட்ட ஒரு வெடிவிபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் 'மிஹின் லங்கா' காரியாலயம் : 12இல் திறப்பு

மிஹின் லங்கா விமான சேவை, அதன் பிராந்திய நிலையம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி திறந்து வைக்கிறது.

இத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாக நாளைய இளைஞர்கள் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கலந்து கொள்வார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது ஸ்ரீலங்கா எயார்வேஸ் மற்றும் இந்தியன் எயார்வேஸ் என்பவற்றின் கிளைகள் மட்டுமே உள்ளன. மிஹின் லங்கா மூலம் அங்குள்ள மக்களுக்கு மேலும் ஒரு சேவையைப் பெறும் வாய்ப்புத் தற்போது கிடைத்துள்ளது.

கட்டுநாயக்க - பலாலி விமான சேவை மற்றும் வெளிநாட்டு விமானப் பயணங்களுக்கான டிக்கட்டுக்களைப் பதிவு செய்தல் போன்ற பணிகளை இதனூடாக மேற்கொள்ள முடியும்.
மேலும் இங்கே தொடர்க...