Sep 11, 2010

குரான் எரிப்புத் திட்டம் கைவிடப்பட்டது

புனித நூலான குரானை எரிக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக அமெரிக்க மத போதகர் டெர்ரி ஜோன்ஸ் அறிவித்துள்ளார்.

நியூயார்க் நகரில் உள்ள இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட சம்பவத்தின் 9-ம் ஆண்டு நினைவு நாளில் குரானை எரிக்கப் போவதாக இவர் அறிவித்திருந்தார். இதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து தனது திட்டத்தைக் கைவிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.

ஃபுளோரிடாவில் உள்ள தேவாலயத்தில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசிய அவர், தனது அறிவிப்புக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இதனால் இதைக் கைவிடுவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் இரட்டைக் கோபுரம் இருந்த இடத்தில் புதிதாக உருவாகும் கட்டடம் அருகே கட்டுவதாக இருந்த இஸ்லாமிய மையம் மற்றும் பள்ளிவாசல் ஆகியவற்றை வேறு இடத்தில் கட்டுவதாக உறுதி மொழி கொடுத்ததைத் தொடர்ந்து தனது திட்டத்தை வாபஸ் பெற்றதாக டெர்ரி ஜோன்ஸ் தெரிவித்தார்.

ஆனால், இஸ்லாமிய மையம் மற்றும் பள்ளிவாசலை வேறு இடத்தில் கட்டிக் கொள்வது தொடர்பாக எவ்வித உறுதி மொழியும் அளிக்கவில்லை என்று இஸ்லாமிய மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வார இறுதியில் நியூயார்க் சென்று அங்கு இமாம் ஃபைசல் அப்துல் ரயூஃபை சந்தித்துப் பேசவிருப்பதாகவும் ஜோன்ஸ் தெரிவித்தார். இது தொடர்பாக ஃபுளோரிடாவில் உள்ள மதத் தலைவர் முகமது முஸ்ரியிடம் பேசியதாகவும், வேறிடத்தில் இஸ்லாமிய மையம் அமைக்க ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறினார். ஆனால் இதை ரயூஃப் மறுத்துள்ளார். குரான் எரிப்பு திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக ஜோன்ஸ் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும் இஸ்லாமிய மையத்தை வேறிடத்துக்கு மாற்றுவது தொடர்பாக ஜோன்ஸ் மற்றும் முஸ்ரியின் அறிவிப்புகள் ஆச்சரியமளிப்பதாக அவர் கூறினார். இது குறித்து அமெரிக்க அரசுடன் பேரம் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் காக்கவே தாங்கள் விரும்புவதாக ரயூஃப் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது வேறிடத்துக்கு மாறப் போவதான அறிவிப்பு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான நாடு அமெரிக்கா அல்ல என்பதற்காக ஒபாமா நிர்வாகம் மேற்கொண்டுவரும் அனைத்து முயற்சிகளும் டெர்ரி ஜோன்ஸின் பேச்சால் சிதைந்துள்ளது.

முன்னதாக டெர்ரி ஜோன்ûஸ அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ச் சந்தித்துப் பேசினார்.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்காவில் பயங்கர தீவிபத்து: ஒருவர் பலி

சான் புருனோவில் இயற்கை எரிவாயு குழாய் வெடித்ததில் தீப்பற்றியும் எரியும் வீடுகள்.
சான் பிரான்சிஸ்கோ, செப்.10: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வியாழக்கிழமை எரிவாயு குழாய் வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர்.

இங்குள்ள சான் புருனோ நகரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் அருகில் உள்ள வீடுகளுக்கு பெரிய குழாய் மூலம் இயற்கை எரிவாயு செல்கிறது. இந்தக் குழாய் வியாழக்கிழமை வெடித்தது.

இதனால் அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீடுகள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சான் புருனோவில் உள்ள மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்துக்குள்ளான பகுதி முழுவதும் போர்க்களம் போல காட்சியளித்தது.

எரிவாயு குழாய் வெடித்த சமயத்தில் அரை மைல் தூரத்தில் விமானம் ஒன்று தாழ்வாக பறப்பது போன்ற சத்தம் கேட்டது என்று அப்பகுதியைச் சேர்ந்த டினா டிலோயா தெரிவித்தார்.

20-க்கும் மேற்பட்ட வீடுகளில் வேகமாக தீ பரவியது. ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், ரசாயனப் பொடிகளை பயன்படுத்தியும் தீ அணைக்கப்பட்டது.

45 வீடுகள் தீ விபத்துக்குள்ளானதாக உள்ளூர் பத்திரிகைககள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தின் மிக அருகில் நிகழ்ந்துள்ளது. 2001 செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க்கின் இரட்டை கோபுரம் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது.

அதன் 9-வது நினைவுதினம் வரும் 11-ம் தேதி வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது பயங்கரவாதிகளின் சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் இதுவரை அதுதொடர்பான தகவல் எதுவும் தெரியவரவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானில் ராணுவ புரட்சி ஏற்படாது: கிலான

இஸ்லாமாபாத், செப்.10: பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி ஏற்படாது என்று பிரதமர் யூசுப் ரஸக்ஷ் கிலானி உறுதிபட தெரிவித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு தனது பதவிக் காலம் முழுவதும் ஆட்சியில் இருக்கும். ராணுவத்தால், இந்த ஆட்சிக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது என்று அவர் மேலும் கூறினார்.

இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியது; இப்போதைய சூழலில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கம் ராணுவத்துக்கு இல்லை. ராணுவம் ஆட்சிக்கு வருவதற்குரிய சூழலும் இல்லை.

பல்வேறு தியாகங்களுக்குப் பிறகு 2008-ம் ஆண்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. இப்போது நீதித்துறை தன்னிச்சையாக ஜனநாயக அடிப்படையில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி செயல்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஒரு பகுதிதான் ராணுவம், இதைக் கருத்தில் கொண்டே வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் ராணுவத்தினர் முழுவீச்சில் ஈடுபடுகின்றனர். ஆனால் மக்கள் மத்தியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிவிடும் என்பதான பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது. இதுபோன்ற தேவையற்ற பேச்சுகளைப் பேசி தங்களது நேரத்தை அவர்கள் வீணடித்துக் கொள்ள வேண்டாம் என்பதே எனது கருத்து. ராணுவம் வேறு, அரசு வேறு என்று நினைப்பவர்கள் முட்டாள்களின் உலகில் வாழ்கிறார்கள் என்றே அர்த்தம்.

பொதுமக்களில் சிலர் ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் ஆர்வம் காட்டுவதாகக் கூறுகின்றனர். ஆனால் ஜனநாயக செயல்பாட்டுக்கு நீதித்துறை உறுதுணையாக உள்ளது.

ஊடகங்கள், மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைத்துமே நாட்டுக்கு தற்போதைய தேவை ஜனநாயக ஆட்சி என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. ஜனநாயகத்தை சீர்குலைக்கும் எத்தகைய நடவடிக்கையையும் உலக சமுதாயம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. தேர்தல் மூலம் மக்களாட்சி நடைபெறுகிறது. இது முழு ஆட்சிக் காலமும் தனது பணியை நிறைவேற்றும் என்றார் கிலானி.

பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டதால் 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் அரசு மெத்தனம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றன. இதனால் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.

அத்துடன் எம்க்யூஎம் என்ற அமைப்பின் தலைவர் அல்டாப் ஹுசைன் சமீபத்தில் ராணுவ தளபதிகளை சந்தித்து, ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் மிராசுதாரர்களுக்கு எதிராக கற்கால தண்டனை அளிக்கலாம் என பரிந்துரைத்திருந்தார். இதுவும் ராணுவ ஆட்சி ஏற்படக் கூடும் என்ற ஐயத்தை மேலும் அதிகரித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...