Sep 30, 2010

அனுராதபுர சிறுவர் தின நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி, பாரியார், பிரதமர்



சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி அனுராதபுரம் சுவர்ணபாலி மகளிர் கல்லூரியில் நாளை முதல் மூன்று தினங்களுக்கு தேசிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மகளிர் விவகார சிறுவர் மேம்பாட்டு அமைச்சர் ஏற்பாடு செய்துள்ள இந்த தேசிய நிகழ்வு நாளை முதலாம் திகதி தொடக்கம் 3ம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் பிரதமர் டி. எம். ஜயரட்ன, சிரேஷ்ட அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பலரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...

மாலைதீவில் இரு இலங்கை மீனவர்கள் நேற்று விடுதலை

மாலைதீவு கடற் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவரும் விடுதலை செய்யப் பட்டுள்ளதோடு அவர்கள் விமானம் மூலம் இன்று இலங்கை வந்தடைய உள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு கூறியது. பேருவளையில் இருந்து இரு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 8 பேர் மாலைதீவு கடற் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் அறுவர் கடந்த ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்டனர். ஏனைய இருவருக்கும் 6 மாத சிறையும் 8 இலட்சம் ரூபா வீதம் தண்டமும் விதிக்கப்பட்டது. தண்டப் பணம் செலுத்தாததால் ஒன்றரை வருட மேலதிக சிறைத் தண்டனை வழங்கப்பட்டதாக அமைச்சு கூறியது.
மேலும் இங்கே தொடர்க...

தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த மறுத்தால் அமெரிக்க தரைப்படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தும்

அமெரிக்க இராணுவத் தளபதி

வொஷிங்டன், செப். 29

பாகிஸ்தானில் உள்ள பழங்குடி இனப் பகுதியில் தஞ்சம் புகுந்து இருக்கும் வெளிநாட்டு தீவிரவாதிகள் முகாம்களை தகர்க்க நீங்கள் மறுத்தால், எங்கள் தரைப்படை உங்கள் நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்கும் என்று அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் டேவிட் எச். பெட்ராயஸ் பாகிஸ்தானை எச்சரித்தார். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு உள்ள நேட்டோ இராணுவத்தின் தளபதியான அமெரிக்க இராணுவ ஜெனரல் பெட்ராயஸ் நிருபர்களிடம் கூறியதாவது,

பாகிஸ்தானில் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியானது அல்கைதா, தலிபான் தீவிரவாதிகளின் சொர்க்கமாக இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசாங்கம் தயங்குகிறது. இது அமெரிக்க அதிகாரிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தீவிரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில் பாகிஸ்தானின் பங்கு இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியான வடக்கு வசீரிஸ்தானில் தீவிரவாதிகளின் கட்டமைப்பை தகர்க்க பாகிஸ்தான் மறுத்தால், அமெரிக்க தரைப்படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும். தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் அரசாங்கம் தாக்குதல் நடத்தாமல் இருப்பதால்தான், அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்களை அதிகரித்து இருக்கிறது. கடந்த 24 நாட்களில் 20 ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

ஏவுகணைத் தாக்குதல்கள் தவிர, மற்ற வழிகளிலும் போர் விரிவு அடைந்து வருகிறது. அமெரிக்க ஹெலிகொப்டர்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 50 தலிபான் தீவிரவாதிகள் பலியானார்கள்.

பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்காக தனி நடவடிக்கை கட்டளை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் தாக்குதலுக்கான திட்டத்தை வரையறுத்து வருகிறார்கள். இவற்றுக்கு ஒபாமாவின் ஒப்புதல் பெறப்பட இருக்கிறது.

இவ்வாறு தளபதி பெட்ராயஸ் தெரிவித்தார். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் 150க்கும் மேற்பட்ட முகாம்களில் தாக்குதல் நடத்தி அவற்றை அழிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...