
ஒத்துழைப்பு வழங்குமாறு தொழிலாளர் வர்க்கத்துக்கு ஜனாதிபதி அழைப்பு
நவம்பர் மாதத்தின் பின்னர் நாட்டின் துரித அபிவிருத்தியை நோக்கிய பயணத்தின் தீர்மானம் மிக்க சந்தர்ப்பத்தில் நாட்டிலுள்ள தொழிலாளர் வர்க்கத்தினர் உட்பட அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நவம்பர் மாதம் தனது இரண்டாவது பதிவிக் காலம் ஆரம்பமாவதுடன் இலங்கையை துரித அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லும் இலக்கை நோக்கி செல்லவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அபிவிருத்தியடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்பும் போது ஒழுக்கம் மிக அவசியமானது. ஒழுக்கமுள்ள பண்புள்ள பரம்பரையொன்றை உருவாக்குவதுடன் நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டிலுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது.
ண்ட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக தொழிலாளர் வர்க்கத்தினர் புரிந்துணர்வுடன் செயற்படுவதையிட்டு ஜனாதிபதி தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். யுத்தத்தின் பின்னர் நாட்டை பாரிய அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு முடிந்துள்ளது.
அடுத்த அபிவிருத்தியை நோக்கிய இலக்கை வேண்டுவதற்குரிய திட்டங்கள் வகுக்கப்படுகின்றதுடன் அடுத்த 20 வருட காலத்துக்குரிய தேவைகளைப் பூரணத்துவபடுத்துவதற்குரிய திட்டங்கள் முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ளன எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சக்திமிக்க அரச சேவையொன்றை கட்டியெழுப்புவதற்கு தொழிற்சங்கங்களின் பங்களிப்பு மிக அவசியமானது. அதன் பலனை இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பெறக்கூடியதாக இருக்குமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழில் அமைச்சர் காமினி லொக்குகே, மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி வீ. பி. ஜயசுந்தர ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
