Oct 16, 2010

ராஜபட்சவுக்கு அழைப்பு; படுகொலைக்கு அளித்த பரிசு: தா.பாண்டியன் பேட்டி






காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்சவை அழைத்தது அவர் இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்ததற்கு அளித்த பரிசு போல உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வெள்ளிக்கிழமை ஒசூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. மணல், கிரானைட் உள்ளிட்ட கனிமங்கள் வருவாய்த் துறையினர் உதவியோடு வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகின்றன. இதை காவல்துறையும் கண்டுகொள்வதில்லை. கோயில் நிலங்களும், அரசு புறம்போக்கு நிலங்களும் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

நெய்வேலியில் 20 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ள தாற்காலிகத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன், தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் லகுமைய்யா ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

இன்னொரு பூமி வேண்டும: விஞ்ஞானிகள்


மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இன்னொரு பூமி தேவைப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழ்நிலை இன்னும் 20 ஆண்டுகளுக்குள் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

÷பூமியில் உள்ள வளங்களை மிகவும் அதிக அளவில் மனிதர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்று வாழும் பூமி குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இயற்கை வளங்களின் நுகர்வு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பூமியின் வளம் பாதியாகக் குறைந்துவிட்டது.

÷தற்போதைய நிலை தொடருமானால் 2030-ம் ஆண்டிற்குள் மேலும் ஒரு பூமி மனிதனுக்குத் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. வெப்ப மண்டல நாடுகளில் வன விலங்குகளின் வாழ்க்கைச் சூழல் கேள்விக்குறியாகியுள்ளது. இவற்றின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் 60 சதவீதமாகக் குறைந்துவிட்டது. புவியில் உள்ள வளங்களில் மிக அதிகமான அளவில் பிரிட்டன் மக்கள் பயன்படுத்துவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல அனைவரும் பயன்படுத்தத் தொடங்கினால் புவியில் உள்ள மக்கள் தொகைக்கு மேலும் ஒரு பூமி தேவைப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

÷புவியில் உள்ள வளங்களைப் பயன்படுத்தும் அளவு மற்றும் கரியமில வாயு வெளியிடும் அளவு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்து பார்க்கும்போது பிரிட்டன் 31-வது இடத்தில் உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நடிகர் விஜய் செய்த உதவி-மரணத்தை வென்ற சிறுவன்!





நடிகர் விஜய் சரியான நேரத்தில் செய்த உதவியால் மரணத்தின் விளிம்பிலிருந்த சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளான். ஆந்திராவைச் சேர்ந்த சிறுவன் யஷ்வந்த். அவனுக்கு சிறு வயதிலேயே ரத்த அழுத்தம் இருந்தது. வாந்தி, தலைவலியால் அவதிப்பட்டான். மூக்கில் இருந்தும் அடிக்கடி ரத்தம் வழிந்தது.

ஆந்திராவில் நிறைய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தும் டாக்டர்கள் காப்பாற்ற முடியாது என கை விரித்தனர். அறுவைச் சிகிச்சை செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

நடிகர் லாரன்ஸ் சென்னையில் அறக்கட்டளை வைத்து குழந்தைகளுக்கு மருத்துவ வசதி அளிப்பதை கேள்விப்பட்டு அவரை அணுகினர். லாரன்ஸ் அச்சிறுவனை விஜய்யிடம் அழைத்து சென்றார். சிறுவனைப் பார்த்த விஜய் எவ்வளவு செலவானாலும் நான் பார்த்து கொள்கிறேன். சிறுவனை காப்பாற்றுங்கள் என்றார். மலர் மருத்துவமனையில் அச்சிறுவன் சேர்க்கப்பட்டான்.

அவனைச் சோதித்த டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், சிறுவனின் இதயத்திலிருந்து கிட்னிக்கு செல்லும் வால்வில் கோளாறு உள்ளதென்றும் ஆபரேஷன் செய்தால் பல லட்சங்கள் செலவாகும் என்றும் கூறினார். மொத்த செலவையும் விஜய்யே ஏற்றதால் சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சைத் தொடங்கப்பட்டது. பெரிய அறுவைச் சிகிச்சை மூலம் சிறுவனைப் பிழைக்க வைத்துவிட்டனர் மருத்துவர்கள். மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்ததும், விஜய்க்கு நன்றி சொல்லத் தேடினான் சிறுவன்.

காவலன் படப்பிடிப்பிலிருந்த விஜய்யைச் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தான் யஷ்வந்த். அவன் பெற்றோரும் விஜய்யின் கையை பிடித்துக் கொண்டு அழுதனர். இந்த சந்திப்பு மனதை உறுக்குவதாக இருந்தது. அவர்களை ஆறுதல்படுத்தி பத்திரமாக ஊர் போய்ச் சேரும்படி கூறி அனுப்பி வைத்தார் விஜய்.
மேலும் இங்கே தொடர்க...

சிங்கங்களுடன் விளையாடும் மனித சிங்கம்!




சிங்கம் என்றாலே கால் பிடறியில் பட ஓடுபவர்கள் பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். நாம் கூட அப்படித்தானே?

சர்க்கஸ் என்றால் சிங்கங்களைப் பயிற்றுவித்து அவற்றுடன் சாகசங்கள் புரிவார்கள். அதன்போதும் சில வேளைகளில் அனர்த்தங்கள் ஏற்படுவதுண்டு.

அதுவல்லாமல், சிங்கத்தை நாம் நேரில் காண்போமானால் அச்ச உணர்வில் உறைந்து போய் விடுவோமல்லவா?

ஆனால் ஒருவர் சிங்கங்களுடன் குதூகலமாக விளையாடுகின்றார் என்றால் ஆச்சரியமாக இல்லையா?

அவர் தான் கெவின் ரிச்சார்ட்சன். இவர் சர்வசாதாரணமாக சிங்கங்களுடன் விளையாடுகிறார்.

தென்னாபிரிக்காவின் ஜொஹார்ன்னஸ்பேர்கிலுள்ள வெள்ளைச் சிங்கங்களுக்கான சரணாலயத்திலேயே இவர் இவ்வாறு அவற்றுடன் விளையாடி வருகிறார்.

34 வயதான கெவின், தன்னை சிங்கங்களுக்கான தூதுவர் எனத் தெரிவிக்கின்றார்.

மேலும் இவர் ஜொஹார்ன்னஸ்பேர்கில் சிங்கங்கள், சிறுத்தைகள், புலிகள் மற்றும் கழுதைகளுக்கான வன விலங்கு பூங்காவொன்றையும் நடத்தி வருகின்றார்.

"சிங்கங்களுடன் ஓர் இரவு முழுவதும் தங்கக்கூட முடியும்" என தெரிவிக்கின்றார் கெவின் ரிச்சார்ட்சன்.

அன்புக்கு மானிடர் மட்டுமல்ல, வன விலங்குகளும் அடிமைதான் என்கின்றாரோ இவர்?
மேலும் இங்கே தொடர்க...

அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் 2 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்க கருணாநிதி உத்தரவு





ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் 40 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் அளிக்கப்படுகின்றன.

தற்போது விவசாய இணைப்பு கோரி சுமார் 4 லட்சத்து 85 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

ஆண்டுக்கு 40 ஆயிரம் இணைப்புகள் வீதம் நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களுக்கும் இணைப்பு வழங்க குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும்.

விவசாயிகளின் நலன் கருதி, 10 வருடங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள சுமார் 2 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் விவசாய மின் இணைப்புகள் வழங்க முதல்- அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இத்தகவல் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அ.தி.மு.க.39-வது ஆண்டு விழா: எம்.ஜி.ஆர். ஆட்சியை மீண்டும் அமைப்போம்- ஜெயலலிதா அறிக்கை





அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உழைப்பால் உயர்ந்தவரும், மக்களைக் கவரும் காந்த சக்தி படைத்தவரும், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியும், தலைமுறைகள் பல கடந்தும் மக்கள் நாயகனாக தொடர்ந்து விளங்குபவருமான, “மக்கள் திலகம்‘

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஓங்கு புகழ் பேரியக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தனது 38 வருட வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 17.10.2010 அன்று அகவை 39-ல் அடியெடுத்து வைக்கிறது.


இந்த நன்னாளில், கழகம் கடந்து வந்த வெற்றிப்பாதைகளின் பெருமிதங்களையும், எதிர்கொண்டு இடர் சாய்த்த பெருமைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.


அதே வேளையில், நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காக வியர்வை சிந்தி உழைத்திட்ட செயல் மறவர்களையும், இயக்கப் பணிகளின் போது உயிர் நீத்திட்ட உத்தமத்தொண்டர்களின் தியாகங்களையும் நம் நெஞ்சில் நினைவுறுத்துவதோடு, கழகத்தின் அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் அனை வருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை இந்த நன்னாளில் தெரிவித்துக் கொள்வதில் நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.

கழகம் பிறந்த சில மாதங்களிலேயே நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தன் முதல் வெற்றியை பெற்றது. எக்குக் கோட்டையாய் கழகத்தைக் கட்டிக்காத்து வந்த நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கழகத்தின் கொள்கை- கோட்பாடுகளை பட்டி தொட்டியெங்கும் பரப்புவதற்காக என்னை 1983-ல் அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளராக்கி மாநிலம் முழுவதும் வலம் வர வைத்தார்.

இவ்வேளையில், 1984-ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பொதுத்தேர்தல் வந்தது. நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். களத்தில் இல்லாத நேரத்தில் நடந்த ஒரு உக்கிரமான போரில், எதிரிகளிடமிருந்து கழகத்தை சேதாரமில்லாமல் கட்டிக்காத்து அவரிடம் ஒப்படைக்கும் பெரும் வாய்ப்பினை உங்கள் அன்புச்சகோதரியாகிய நான் பெற்றேன்.

புரட்சித் தலைவர் நலமாக இருப்பதாகவும், அவர் படுக்கையில் இருந்தபடியே வெற்றி பெற்று, உங்கள் திருமுகம் பார்ப்பதற்கு விரைவில் தமிழகம் திரும்பி வருவார் என்கிற நம்பிக்கையூட்டும் பிரச்சாரத்தையும் தமிழகம் முழுவதும் நான் செய்து வந்ததின் விளைவாக, பொய்ப்பிரசாரம் முறியடிக்கப்பட்டு, அ.தி.மு.க. அமோக வெற்றியை ஈட்டியது.

கழகக் கண்மணிகளாகிய உங்களின் உறுதுணையாலும், ஓய்வில்லாத உழைப்பாலும், இடைவிடாத போராட்டங்களாலும், 1989-ல் பிளவுற்றுக் கிடந்த கழகத்தை ஒன்றுபடுத்தி, இழந்த “இரட்டை இலை” சின்னத்தை மீட்டு, பூட்டப்பட்ட கட்சி அலுவலகத்தையும் திறந்து, புதிய மறுமலர்ச்சியை கழகத்திற்கு ஊட்டியதன் விளைவாக, மதுரை கிழக்கு, மருங்காபுரி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அன்றைய ஆளும் கட்சியான திமுகவை அபாரமாய் தோற்கடித்து மீண்டும் அ.தி.மு.க.வை வெற்றிப்பாதைக்கு நான் அழைத்து வந்ததை நீங்கள் அறிவீர்கள்.

1991ல் எனது தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அ.தி.மு.க. அரசு, தமிழகத்திற்கு ஒரு பொற்கால ஆட்சியை வழங்கும் பொருட்டு, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைத்தது; உலகம் போற்றும் அன்னை தெரசாவே மனம் திறந்து பாராட்டும் வண்ணம் தொட்டில் குழந்தைகள் திட்டத்தை செயல்படுத்தியது, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்தி வைத்திருந்தது, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு சட்டப்பாதுகாப்பு கொடுத்தது; எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது. 1996-ல் நம் கழகம் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவானது.

ஆனாலும், மனம் தளர்ந்துவிடாது, செயல் சோர்ந்துபோகாது, தொண்டர்களை தட்டிக்கொடுத்து, தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தொண்டர்களுக்கு ஊட்டி, அதன் மூலம் மீண்டும் கழகத்தை எழுச்சிப்பாதைக்குள் கொண்டு வந்து, 1998ல் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் பெரும் வெற்றிகளை நான் குவிக்கச் செய்தேன்.

2001 சட்டமன்றப் பொதுத்தேர்தலில், நமது மாசற்ற மக்கள் இயக்கம் எனது தலைமையிலான அ.தி.மு.க.வின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச்செய்தது. தமிழகத்தின் நீண்ட கால வளர்ச்சியை மனதில் கொண்டு எண்ணற்ற புரட்சிகர திட்டங்களை தமிழகத்திற்கு தந்தோம்.

மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை தரக்கூடிய வலிமையும், வல்லமையும் கொண்ட ஒரே அரசியல் பேரியக்கம் அ.தி.மு.க. தான் என்பதில் எள் முனையளவும் ஐயமில்லை. எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின் எத்தனையோ இன்னல்களையும், இடர்பாடுகளையும், சோதனைகளையும் எதிர்கொண்டு இந்த இயக்கத்தை மீண்டும் மீண்டும் வெற்றியை நோக்கி என்னால் அழைத்துச் செல்ல முடிகிறது என்றால், அதற்கான ஊக்க சக்தியாக இருப்பது உத்தமத் தொண்டர்களாகிய உங்களின் கள்ளமில்லா அன்பும், கடமை உணர்வோடு கூடிய ஒத்துழைப்பும், என் மீது எந்நாளும் நீங்கள் கொண்டிருக்கும் மாசற்ற பற்றும் தான்.

அ.தி.மு.க.வின் 39ஆவது ஆண்டு தொடக்க விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், ஆங்காங்கே நம் வெற்றியைத் தாங்கி நிற்கும் கழகக் கொடிக்கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி விழாக்கோலம் கண்டு, இனிப்புகள் வழங்கி சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து மக்கள் பணியாற்றுங்கள்; ஒரு பொன்னான எதிர்காலம் நமக்காக காத்திருக்கிறது. 2011-ல் அமையப்போகும் புதிய அரசிற்கான சட்டமன்றத் தேர்தலிலும் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் உருவாக்கிட இந்நாளில் நாம் அனைவரும் சபதமேற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஆட்டோவில் சென்ற பயணி மீது தாக்குதல்: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்- மனிதஉரிமை ஆணையம் உத்தரவு


சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் காசிநாதன். இவர் 19.6.2007 அன்று காலை 8.15 மணிக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது கோயம்பேடு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த மாரிவேலு ஆட்டோவை நிறுத்தினார்.

ஆட்டோ டிரைவரிடம் பல்வேறு கோப்புகளை கேட்டார். அப்போது ஆட்டோவில் இருந்த பயணி காசிநாதன், என்ன பிரச்சினை? என்று விசாரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிவேலு கேள்வி கேட்க நீ யார்? எம்.பி.யா? எம்.எல்.ஏ.வா? என்று கூறி பயணியை அடித்து உதைத்தார்.

அசிங்கமாக பேசிய அவர் ஆட்டோ டிரைவருக்கு ரூ.550 அபராதம் விதித்தார். அதுவும் செலுத்தப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் தாக்கியதில் காயம் அடைந்த காசிநாதன் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக காசிநாதன் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக அவர் அளித்த மனுவில், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டரின் வரம்பு மீறிய நடவடிக்கையால்தான் உடலாலும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு உரிய தீர்ப்பு வழங்கும்படியும் கூறி இருந்தார்.

மனுவை விசாரித்த மனிதஉரிமை ஆணைய உறுப்பினர்கள் செல்வக்குமார், பரமசிவன் ஆகியோர் ஆட்டோ பயணி காசிநாதனை தாக்கிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிவேலுவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளனர். அந்த தொகையை அவரது சம்பளத்தில் இருந்து செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

தலிபான்களால் அறுக்கப்பட்ட ஆப்கன் பெண்ணின் மூக்கு ஆபரேசன் மூலம் சீரமைப்பு


ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் அலிஷா (19). ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இவரை 12-வது வயதில் தலிபான் தீவிரவாதிக்கு திருமணம் செய்து வைத்தனர். இதை தொடர்ந்து கணவரது குடும்பத்தில் அவரை மிகவும் கொடுமைப்படுத்தினர்.

மாட்டு கொட்டகையில் அவரை தங்க வைத்தனர். இரவில் ஆடு, மாடுகளுடன் அவரையும் அங்கேயே தூங்க வைத்தனர். மேலும் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். இது போன்ற தாங்க முடியாத பல கொடுமைகளை செய்தனர்.

இதனால், வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். இருந்தும் கணவர் அவரை விடவில்லை. அவரை, தேடி கண்டு பிடித்து இழுத்து வந்தனர். அலிஷாவின் மூக்கு மற்றும் காது போன்ற உறுப்புகளை அறுத்து முக அழகை கோரமாக்கினர்.

இதை தொடர்ந்து வாழ்க் கையில் வெறுப்புற்ற அவர் மலையில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்த உறவினர்கள் மீட்டு அவரது தாத்தா வீட்டில் தங்க வைத்தனர். இதற்கிடையே மூக்கு மற்றும் காது அறுக்கப்பட்ட நிலையில் இருந்த அவரது போட்டோ “டைம்” பத்திரிகையில் அட்டைப்படமாக வெளியானது. இது உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.

இதற்கிடையே அவரது மூக்கு மற்றும் காதை சீரமைத்து உதவ அமெரிக்காவின் கிராஸ்மேன் பர்ன் அறக்கட்டளை முன் வந்தது. அவர்கள் அலிஷாவை அமெரிக்காவுக்கு அழைத்து சென்றனர்.

பின்னர், கலிபோர்னியாவில் உள்ள “வெஸ்ட் கில்வ்” ஆஸ்பத்திரியில் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேசன் மூலம் மூக்கு மற்றும் காது சீரமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அலிஷா தான் இழந்த அழகிய முகத்தை மீண்டும் பெற்றார்.

எலும்பு, தசை மற்றும் சவ்வுகளால் அவரது காது மற்றும் மூக்கு சரி செய்யப்பட்டது. இழந்த உறுப்புகளை கண்ணாடி மூலம் மீண்டும் பார்த்த அலிஷா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதற்காக தனக்கு உதவி செய்த அறக்கட்டளை நிறுவனத்தின ருக்கு நன்றி தெரிவித்தார்.

இதற்கிடையே, மீண்டும் புதுவாழ்வு பெற்ற அலி ஷாவை உற்சாகப்படுத்தும் வகையில் அவருக்கு கலி போர்னியாவின் கவர்னரும், நடிகருமான அர்னால்டின் மனைவி மரியா ஷரைவர் விருது வழங்கினார்.
மேலும் இங்கே தொடர்க...

உலக நாடுகளில் செல்போன் உதவியால் வறுமை குறைகிறது: ஐ.நா.சபை தகவல்


உலக நாடுகளில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் 500 கோடியே எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது விரைவில் ஒவ்வொரு பேரிடமும் ஒரு செல்போன் இருக்கும் அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. தற்போது வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் 100 பேருக்கு 58 பேரிடம் செல்போன் உள்ளது. ஏழை நாடுகளில் 100 பேரில் 25 பேரிடம் செல்போன் இருக்கிறது.

செல்போன் உபயோகத்தால் உலக நாடுகளில் வறுமை குறைந்து வருகிறது என்று ஐ.நா.சபை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. செல்போன் வைத்து இருப்பவர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை செல்போன் மூலமே எளிதாக பெற்று விடுகின்றனர்.

இதனால் அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு பணம் செலவு செய்து செல்ல தேவையில்லை. வீண் அலைச்சல் குறைகிறது.

இது போன்ற காரணங்களால் மக்களுக்கு பல வழிகளில் செலவுகள் குறைகின்றன. எனவே வறுமை நிலையும் குறைகிறது என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

செல்போன் மூலம் ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

திருவாரூர் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரெயில் மீது என்ஜின் மோதல்

திருவாரூர் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 8 மணிக்கு திருத்துறைப்பூண்டி செல்லும் பாசஞ்சர் ரெயில் புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது.

அதே ரெயில் பாதையில், பின்புறம் தனி என்ஜின் ஒன்று குட்ஷெட்டிற்குச் செல்ல நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில், திருத்துறைப்பூண்டி ரெயில் புறப்பட்டதாக நினைத்து, பின்னால் நின்று கொண்டிருந்த என்ஜினை டிரைவர் இயக்கினார்.

இந்த என்ஜின், திருத்துறைப்பூண்டி ரெயிலின் கடைசிப் பெட்டி மீது மோதியது. இதில் கடைசிப் பெட்டி சேதம் அடைந்தது. அதில் இருந்த சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து இந்த பெட்டியைக் கழற்றிவிட்டு மாற்று பெட்டி மாட்டப்பட்டு திருத்துறைப்பூண்டி ரெயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
மேலும் இங்கே தொடர்க...