Oct 29, 2010

முதல்வர் துரோகம்: வைகோ






காவிரி பிரச்னையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுடன் இணைந்து, முதல்வர் கருணாநிதி துரோகம் இழைத்து விட்டார்,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறினார்.அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில், ஆரம்பத்திலிருந்து முதல்வர் கருணாநிதி துரோகம் செய்து வருகிறார். தனது குடும்பத்தினருக்கு பதவி பெறுவதில் தான் அவர் அக்கறை காட்டினார்."கர்நாடகாவில் மழை பெய்யவில்லை; பின், எப்படி தண்ணீர் வரும்' என்ற கேள்வியை கேட்டவரே முதல்வர் கருணாநிதி. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுடன் இணைந்து, முதல்வர் கருணாநிதி துரோகம் செய்து விட்டார்.கர்நாடக அரசும் தண்ணீர் தர முடியாது என கூறியுள்ளது. இதை மத்திய அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் செயல்.இவ்வாறு வைகோ கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழக மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி: ஜெ., பாய்ச்சல்





சென்னை : காவிரி பிரச்னையில், முன்கூட்டியே சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், தண்ணீர் திறந்துவிட முடியாது' என கர்நாடக அரசு கைவிரித்தவுடன், "சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என கருணாநிதி அறிவித்திருப்பது, தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும் என்பது பழமொழி. வெள்ளம் வந்த பிறகு அணை போட வேண்டும் என்பது கருணாநிதியின் புதுமொழி. சம்பா சாகுபடியை பாதுகாக்கும் விதமாக, முன்கூட்டியே சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், கடிதம் எழுதி காலத்தைக் கழித்து விட்டார். "தண்ணீர் திறந்துவிட முடியாது' என கர்நாடக அரசு கைவிரித்தவுடன், "சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என கருணாநிதி அறிவித்திருப்பது, தமிழக மக்களை ஏமாற்றும் செயல். கருணாநிதியின் எண்ணமெல்லாம், "கை'யுடனான தன் உறவைப் பாதுகாப்பதில் தான் இருக்கிறதே தவிர, தமிழர்களின் உரிமையைக் கேட்டுப் பெறுவதில் இல்லை. தி.மு.க., அரசு அமைந்த பிறகு 2007 பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை அளித்தது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இந்த தீர்ப்பை மத்திய கெஜட்டில் வெளியிடவோ, இறுதித் தீர்ப்பில் பரிந்துரைத்தபடி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கவோ தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், 1991ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தனது இடைக்கால தீர்ப்பை வழங்கியபோது, ஆறே மாதத்தில் அதை மத்திய கெஜட்டில் வெளியிட நடவடிக்கை எடுத்தேன்.

அனைத்து கட்சிக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களைச் சந்தித்த கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை, "தமிழக அரசு எவ்வளவு தண்ணீர் வேண்டுமென கேட்கவில்லை' எனக் கூறியிருப்பதாக செய்தி வந்துள்ளது. இதிலிருந்தே, ஏதோ எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறாரே என்பதற்காக கருணாநிதி கடிதம் எழுதியிருப்பது தெரிகிறது. கூட்டணி உறவு நீடிக்கவும், ஊழல் குற்றங்களில் இருந்து தப்பிக்கவும், வளம் கொழிக்கும் இலாகாக்களைப் பெறவும், காங்கிரஸ் தலைவரையும், பிரதமரையும் சந்திக்கிறார் கருணாநிதி. ஆனால், காவிரியில் நமக்குள்ள உரிமையைப் பெறுவதற்காக ஏன் இவர்களைச் சந்திக்க மாட்டேன் என்கிறார்?

எனது ஆட்சிக் காலத்தில், காவிரி நீரைப் பெறுவதற்காக நான்கு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினேன்; முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டுமாறு பல முறை பிரதமரை வலியுறுத்தியிருக்கிறேன். இதுதவிர, சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடி, கர்நாடகாவிடமிருந்து தண்ணீரைப் பெற்று இருக்கிறோம். ஆனால், இப்போது கடிதம் எழுதவே தயங்குகிறார் கருணாநிதி. நான்கரை ஆண்டுகளில் காவிரிக்காக ஏதாவது போராட்டம் நடத்தியிருக்கிறாரா? பிரதமரைச் சந்தித்து முறையிட்டிருக்கிறாரா? எதையும் செய்யவில்லை. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, ஜூனில் 10 டி.எம்.சி., தண்ணீரையும், ஜூலையில் 34 டி.எம்.சி., ஆகஸ்ட் 50 டி.எம்.சி., செப்டம்பர் 40 டி.எம்.சி., அக்டோபர் 22 டி.எம்.சி., என மொத்தம் 156 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்து விட்டிருக்க வேண்டும்; ஆனால், செய்யவில்லை.

நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படியோ, இறுதித் தீர்ப்பின்படியோ கர்நாடகத்திடம் தண்ணீரைப் பெற கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்? கடிதம் எழுதியதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, கர்நாடகத்திடமிருந்து சம்பா சாகுபடிக்குத் தேவையான காவிரி நீரைப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வீட்டு வசதி சங்கங்களில் கடன் வாங்கியவர்கள், நிலுவையைத் திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைத் திட்டத்தில் கால அவகாசம்

வீட்டு வசதி சங்கங்களில் கடன் வாங்கியவர்கள், நிலுவையைத் திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைத் திட்டத்தில் கால அவகாசம், அடுத்த ஆண்டு ஜூன் வரை நீட்டிக்கப்படும்' என, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:நகர்ப்புற மற்றும் கிராம வீட்டு வசதித் திட்டங்களில், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் வீடுகள் கட்டுவதற்காக பலர் கடன்கள் பெற்றிருந்தனர்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்த வருவாய்ப் பிரிவினர், நடுத்தர வருவாய்ப் பிரிவினர், உயர் வருவாய்ப் பிரிவினர் என அனைவரும் 2008ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நிலுவையில் இருந்த கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக அரசின் சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன.இவர்கள் குறைந்தளவிலான குறிப்பிட்ட கடன் தொகையையும், வட்டியையும் 2008ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் செலுத்தினால், அவர்களது மீதமுள்ள கடன் மற்றும் அபராத வட்டித்தொகை தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறப்பட்டது.

பின் அச்சலுகை 2008ம் ஆண்டு டிசம்பர், 2009ம் ஆண்டு மார்ச் என இருமுறை நீட்டிக்கப்பட்டது. தற்போது பலரும் பயனடையும் வகையில், இத்திட்டத்தில் அளிக்கப்படும் சலுகைகளை 2011ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தி.மு.க.வில் கோஷ்டிகள் இல்லாத நிலை வேண்டும்: கருணாநிதி







முதல்வர் கருணாநிதி. உடன் (இடமிருந்து) கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொதுச்செயலாளர் க.அன்பழகன், கட்சியின் பொருளாளரும், துணை முதல்வருமான
சென்னை, அக். 28: தி.மு.க.வில் கோஷ்டிகள் இல்லாத நிலையைத் தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

÷சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக மாவட்டம்தோறும் தி.மு.க.வினரின் குறைகளை முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட கட்சியின் மூத்தத் தலைவர்கள் கேட்டு வருகின்றனர். தென் சென்னை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

÷இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

÷கட்சிக்கு அப்பாற்பட்டவர்களுடன் நான் கலந்து ஆலோசித்ததில், குழு மனப்பான்மை காரணமாக ஒரு சில இடங்களிலே ஒற்றுமையின்மை இருக்கிறது தெரியவந்துள்ளது. எந்த வட்டத்திலாவது இரண்டு குழுக்கள் இருக்குமானால், அந்தக் குழுக்கள் எல்லாம் தி.மு.க.வின் முன்னேற்றத்தை அழிக்கின்ற புழுக்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

÷என்னதான் நீங்கள் இங்கே உறுதி எடுத்துக்கொண்டாலும், சபதம் மேற்கொண்டாலும், உங்களிடத்திலே உள்ள ஒற்றுமை கெட்டிப்படவில்லை என்றால், அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடியாது.

÷அந்தக் குழுக்களை, குழு மனப்பான்மையை அகற்றினால்தான், தி.முக. ஒரு லட்சியக் கூடாரம் என்பதை எடுத்துக்காட்ட நம்மால் முடியும்.

÷குழுக்கள் என்பதை மறந்துவிட்டு, குழு மனப்பான்மையை ஒதுக்கிவைத்துவிட்டு, எல்லோரும் ஒன்றுதான், எல்லோரும் தி.மு.க.தான் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும்.

÷அவ்வாறு செயல்பட்டால், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அல்ல; ஜெயலலிதாவோடு 100 பேர் அணி திரண்டு வந்தாலும், தி.மு.க.வை யாராலும் வெல்ல முடியாது; யாராலும் வீழ்த்த முடியாது.

÷இந்த இயக்கத்தில் குழுக்களே இல்லை; கோஷ்டிகளே இல்லை என்ற நிலைதான் உயர்ந்த நிலை என்பதை உணர வேண்டும்.

÷அநேகமாக, கோஷ்டிகள் இல்லாத கட்சியே தமிழ்நாட்டில் கிடையாது. நாம் மாத்திரம் ஏன் அப்படி இருக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். நமது கட்சியில் கோஷ்டிகள் இல்லாத காரணத்தினால்தான், இன்றைக்கு கூட்டணியினுடைய பிரதான கட்சியாகவும், ஆளுங்கட்சியாகவும் இருக்க முடிகிறது.

÷ஆகவே, கோஷ்டிகள் இல்லாத நிலையைத் தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும்.

÷சென்னை மாநகராட்சி மீது ஊழல் புகார் வந்தபோது, மாநகராட்சியைக் கலைத்து விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதன்மூலமாக, தி.மு.க.வுக்கு கிடைத்த மதிப்பு, மரியாதைதான் அடுத்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தது.

÷தி.மு.க. நிகழ்ச்சிகள், கூட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் செல்ல வேண்டும். அதேபோல், மாவட்டச் செயலாளர் என்றால், அடிக்கடி தலைமையகத்துக்கு வரவும், தலைவரோடு கலந்து பேசுவதையும் தனது வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி.

தென் சென்னை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பேசுகிறார்
மேலும் இங்கே தொடர்க...

தமிழகம் காவிரி நீரைப் பெற சட்டப்படி நடவடிக்கை: முதல்வர் கருணாநிதி

நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கை பெறுவதற்கு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

÷நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த கர்நாடக அரசு, இப்போதுள்ள சூழ்நிலையில் தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என்று புதன்கிழமை அறிவித்தது.

÷எனவே தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதி இதைக் கூறினார்.

÷தி.மு.க.வின் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அவருடைய தலைமையில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடந்தது.

÷அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

÷பத்திரிகைகளில் வரும் செய்திகளின் அடிப்படையில் பதில் சொல்ல விரும்பவில்லை. அப்படிக் கூறி, இரு மாநிலங்களுக்கு இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட நான் இடம் தர விரும்பவில்லை.

÷சட்டப்படி நமக்கு வந்து சேர வேண்டிய நீருக்காக தொடர்ந்து நாம் வாதாடுவோம்; நடவடிக்கை எடுப்போம்.

÷கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்ததாகவும், தமிழகத்துக்குத் தண்ணீர் தரக்கூடாது என்று அதில் முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படும் செய்திகளை இன்னும் பார்க்கவில்லை. அவற்றைப் பார்த்த பிறகுதான் அதுபற்றி கருத்து கூற முடியும்.

÷காவிரியில் தண்ணீர் திறப்பது பற்றி ஏற்கெனவே பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரடியாக கூறியிருக்கிறோம். எனவே கடிதம் எழுத வேண்டியதில்லை. அவருக்கு இதுபற்றித் தெரியும்.

÷இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அது குறித்து சட்டப்படி நாங்கள் அணுகுவோம் என்று முதல்வர் கூறினார்.

÷காவிரியில் 25 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: இந்நிலையில், கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட்டது என கர்நாடகத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

÷வியாழக்கிழமை கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 124.70 அடியாக இருந்தது. அணைக்கு வியாழக்கிழமை நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி அணைக்கு விநாடிக்கு 25,043 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து விநாடிக்கு 25,099 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. புதன்கிழமையைவிட வியாழக்கிழமை அணையில் இருந்து கூடுதலாக 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்தத் தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும். காவிரி பாசனப் பகுதியில் உள்ள மற்றோர் அணையான கபினியில் நீர்வரத்து குறைவாக இருந்ததால், அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

மும்பையில் மாணவர்களுடன் தீபாவளி கொண்டாடுகிறார் ஒபாமா



இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மும்பையில் பள்ளி மாணவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார்.

ஒபாமாவின் பயணத் திட்டம் குறித்து அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முதல் நாள்: நவம்பர் 6-ல் மும்பை வரும் ஒபாமா, தாஜ் ஹோட்டலில் தங்குகிறார். அங்கு மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அவர் அஞ்சலி செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து தெற்கு மும்பையில் மணி பவனில் அமைந்துள்ள காந்தி அருங்காட்சியகத்துக்கு செல்கிறார்.

அமெரிக்க- ஆப்பிரிக்கர்களைக் கவர்ந்த மாமனிதர் மகாத்மா காந்தி. மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட பலருக்கு அவர் வழிகாட்டி. அதிபர் ஒபாமா, தனது தனிப்பட்ட விருப்பத்தின்பேரில் காந்தி அருங்காட்சியகத்துக்குச் செல்கிறார்.

பின்னர், மும்பையில் நடைபெறும் இந்திய- அமெரிக்க தொழிலதிபர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். அன்றிரவு தாஜ் ஹோட்டலில் தங்குகிறார்.

இரண்டாம் நாள்: 7-ம் தேதி பகலில் மும்பையிலேயே தங்கியிருக்கும் அவர், அங்குள்ள பள்ளியில் மாணவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுகிறார். (பாதுகாப்பு காரணங்களுக்காக வாண வேடிக்கைகள் இருக்காது என்று கூறப்படுகிறது.)

பின்னர், டவுன்ஹாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். அதைத் தொடர்ந்து இந்திய பிரதிநிதிகளைச் சந்திக்கும் அவர், விவசாயம், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

தாஜ்மகாலுக்கு செல்லவில்லை: 7-ம் தேதி மாலை தில்லி செல்லும் அவர், ஹுமாயூன் நினைவிடத்தைப் பார்வையிடுகிறார். ஆனால், உலக அதிசயமான தாஜ்மகாலுக்கு செல்லமாட்டார். அடுத்தமுறை இந்தியா வரும்போது அவர் தாஜ்மகாலுக்கு செல்லக்கூடும்.

அன்றிரவு பிரதமர் மன்மோகன் சிங்- குருசரண் கௌர் அளிக்கும் விருந்தில் ஒபாமாவும் அவரது மனைவி மிசேலும் பங்கேற்கின்றனர்.

லண்டனில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் மன்மோகன் சிங்கை முதல்முறையாக ஒபாமா சந்தித்தார். அதன்பின்னர் இரு தலைவர்களும் மிகவும் நெருக்கமாகி விட்டனர். உலகின் மற்ற தலைவர்களைவிட இருவருக்கும் இடையே பொருளாதாரம் சார்ந்த தகவல் பரிமாற்றம் அதிகமாக உள்ளது. எனவே, மன்மோகன் சிங்குடன் விருந்தில் பங்கேற்பதில் ஒபாமா மிகவும் ஆர்வமாக உள்ளார்.

மூன்றாம் நாள்: 8-ம் தேதி காலையில் தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அதிபர் மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுகிறார். இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாகப் பேட்டியளிப்பர்.

பின்னர் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஒபாமா உரையாற்றுகிறார். அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஒபாமா குறிப்பிட்டுப் பேசுவார்.

அன்று மாலையில் இந்திய குடியரசுத் தலைவரை அவர் சந்தித்துப் பேசுகிறார். இரவில் நடைபெறும் அரசு விருந்திலும் அவர் பங்கேற்கிறார் என்றார் அவர்.

தலைப்பாகை விவகாரம்: இந்திய பயணத்தின்போது அதிபர் ஒபாமாவின் அமிருதசரஸ் பொற்கோயில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இந்திய, அமெரிக்க ஊடகங்கள், பொற்கோயில் செல்லும்போது தலைப்பாகை அணிய வேண்டும் என்பதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளன.

அமெரிக்காவில் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஐந்தில் ஒருவர், ஒபாமாவை முஸ்லிமாக கருதுகிறார் என்று கூறப்படுள்ளது. பொற்கோயிலுக்கு செல்லும்போது தலைப்பாகை அணிந்தால் அமெரிக்கர்கள் அவரை முஸ்லிம் என முத்திரை குத்திவிடுவார்கள் என்ற பயத்தால் பயணத் திட்டத்தை ஒபாமா ரத்து செய்து விட்டார் என்று செய்திகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் திட்டவட்டமாக மறுத்தார்.

வெளிநாட்டுப் பயணத்தின்போது மசூதி, தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்களுக்கு அந்தந்த நாட்டு பாரம்பரிய வழக்கப்படியே ஒபாமா செல்கிறார். நேரக் குறைவு காரணமாகவே அமிருதசரஸ் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

வியத்நாமில் மன்மோகன் சிங்

ஹனோய், அக். 28: ஆசியான்- இந்தியா, மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை வியத்நாம் தலைநகர் ஹனோய் சென்றார்.

பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான், மலேசியா மற்றும் வியத்நாம் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஒரு வார கால பயணத்தின் கடைசி கட்டமாக வியத்நாமுக்கு அவர் வியாழக்கிழமை சென்றார்.

அங்கு நடைபெறும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் உச்சி மாநாடு ஆகியவற்றில் அவர் கலந்து கொள்கிறார். விமான நிலையத்தில் அவரை வியத்நாம் சட்ட அமைச்சர் ஹா ஹங் குவாங் வரவேற்றார்.

வர்த்தகம், எரி சக்தி துறையில் ஒத்துழைப்பு, பேரிடர் மேலாண்மை, தட்ப வெட் நிலை மாறுபாடு மற்றும் வெப்பமயமாதல் உள்ளிட்ட பல அம்சங்கள் மாநாட்டில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

வியத்நாம் பயணத்தின் போது சீனப் பிரதமர் வென் ஜியா பாவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது காஷ்மீர் மக்களுக்கு சீனா தனி விசா வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சீனப் பிரதமருடன் மன்மோகன் சிங் பேசுவார் எனத் தெரிகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தோனேசியாவில் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 343 ஆக உயர்வு


ஜகார்த்தா, அக். 28: இந்தோனேசியாவில் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை வியாழக்கிழமை 343 ஆக உயர்ந்தது.

மெந்தாவி தீவில் திங்கள்கிழமை கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி பேரலைகள் எழுந்து பலர் உயிரிழந்தனர். சாவு எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இன்னும் 338 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தோனேசியாவில் 2004-ல் ஏற்பட்ட சுனாமியை அடுத்து பல கோடி மதிப்புள்ள எச்சரிக்கை கருவிகள் சுமத்ரா தீவுப் பகுதிகளில் நிறுவப்பட்டன. ஆனால், அவற்றை முறையாகப் பராமரிக்காததால் கருவிகள் செயலிழந்து விட்டதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...