
வியாசர்பாடி மார்க்கெட் அருகே “மேத்தா ஜுவல்லரி” என்ற பெயரில் நகை கடை உள்ளது. தீபாவளியையொட்டி, தங்கநகை வாங்குவதற்காக நேற்று முன்தினம் இங்கு அதிக அளவில் கூட்டம் இருந்தது. ஏராளமான பெண்கள் நகையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பெண் தங்க சங்கிலி, வளையல் ஆகியவற்றை திருடி ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்தார். இதை நகைக்கடை அதிபர் சம்பத்ராஜ் ரகசிய கேமரா மூலம் பார்த்தார். உடனே கடையின் கதவு மூடப்பட்டது. நகை திருடிய பெண்ணை கடை ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது வியாசர்பாடி நகைக்கடையில் 9 பவுன் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதுதவிர சர்மா நகரில் உள்ள ”மகேந்திரா ஜுவல்லர்ஸ்” என்ற நகை கடையில் நகை வாங்குவதுபோல் நடித்து 5 பவுன் மாலையை மடியில் மறைத்து வைத்து திருடியதாகவும் கூறினார்.
இதுதவிர மேலும் 11 பவுன் நகை திருடியதாகவும் தெரிவித்தார். அந்த பெண்ணிடம் இருந்து 25 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
அயனாவரத்தை சேர்ந்த அவளது பெயர் தாட்சாயணி (37) என்பதும், நகை கடைகளில் தொடர்ந்து கைவரிசை காட்டியதாகவும் கூறினார். அவளை வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர்.
இதுதவிர கொடுங்கையூர் நாராயணசாமி தெருவில் வசிக்கும் சந்திரசேகர் என்ப வருடைய வீட்டிலும் 7 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. வணிக வரித்துறை அதிகாரியான இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்றபோது, யாரோ வீட்டுக்குள் புகுந்து நகைகளை திருடி உள்ளனர்.
புதுவண்ணாரப்பேட்டை டி.எச். ரோட்டைச் சேர்ந்தவர் மாலா (37). விதவைப் பெண். இவரது கணவர் ஸ்ரீதர் கடந்த ஆண்டு இறந்து போனார்.
கணவரின் நினைவிடம் கல்பாக்கத்தில் உள்ளது. நேற்று அவரது நினைவு நாள். இதையொட்டி மாலா கணவரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்றிருந்தார்.
இரவில் வீடு திரும்பிய மாலா வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 20 பவுன் நகை மற்றும் ரூ. 30 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.