Feb 7, 2011

நாட்டில் தொடர்ச்சியான மழை: 12,43,478 பேர் பாதிப்பு; 2,50,501 மக்கள் முகாமில்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்துவருகின்ற தொடர்ச்சியான மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 18 மாவட்டங்களில் மூன்று இலட்சத்து 62 ஆயிரத்து 821 குடும்பங்களைச் சேர்ந்த 12 இலட்சத்து 43 ஆயிரத்து 478 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 67 ஆயிரத்து 508 குடும்பங்களை சேர்ந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்து 501 பேர் இடம்பெயர்ந்த நிலையில் 689 முகாம்களில் தங்கியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரை வெள்ளம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் மூவர் காணாமல் போயுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 ஆயிரத்து 350 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 40 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 94 ஆயிரத்து 354 பேர் 197 முகாம்களில் தங்கியுள்ளனர். நாடளாவிய ரீதியில் 1161 வீடுகள் முழுமையாகவும் 8412 வீடுகள் பகுதியளவிலும் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது

திருகோணமலை மாவட்டத்தில் 87 ஆயிரத்து 191 குடும்பங்களை சேர்ந்த மூன்று இலட்சத்து 24 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்து 220 குடும்பங்களை சேர்ந்த 78 ஆயிரத்து 510 பேர் 176 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இம்மாவட்டத்தில் கந்தளாய், மூதூர், வெருகல், தம்பலகாமம் உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 ஆயிரத்து 350 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 40 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 ஆயிரத்து 19 குடும்பங்களைச் சேர்ந்த 94 ஆயிரத்து 354 பேர் 197 முகாம்களில் தங்கியுள்ளனர். கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று மேற்கு, மண்முனை மேற்கு, மண்முனை பற்று, காத்தான்குடி, எருவில்பற்று, போரதீவு பற்று, ஏறாவூர் உள்ளிட்ட பல பிரதேசங்கள் இந்த மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் 74 ஆயிரத்து 432 குடும்பங்களை சேர்ந்த இரண்டு இலட்சத்து 82 ஆயிரத்து 685 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6558 குடும்பங்களை சேர்ந்த 24 ஆயிரத்து 923 பேர் 81 முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த மாவட்டத்தில் சம்மாந்துரை, நிந்தவூர், கல்முனை, இறக்காமம், சாய்ந்த மருது, காரைதீவு, ஆலையடி வேம்பு, திருக்கோவில் உள்ளிட்ட பல பிரதேசங்கள் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மாத்தளை மாவட்டத்தில் 478 குடுபங்களை சேர்ந்த 1949 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 350 குடும்பங்களை சேர்ந்த 1450 பேர் ஏழு முகாம்களில் தங்கியுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இம்மாவட்டத்தில் 11 முகாம்களில் 240 குடும்பங்களை சேர்ந்த 808 பேர் தங்கியுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தில் 6124 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5247 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 631 பேர் 68 முகாம்களில் தங்கியுள்ளனர். இம்மாவட்டத்தில் பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 1007 குடும்பங்களை சேர்ந்த 3769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 தற்காலிக முகாம்களில் 3467 பேர் தங்கியுள்ளனர்.

இதேவேளை வெள்ளப்பெருக்கு காரணமாக வவுனியா மாவட்டத்தில் 20 ஆயிரத்து 789 குடும்பங்களை சேர்ந்த 79 ஆயிரத்து 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6613 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 876 பேர் 79 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். அத்துடன் இந்த மாவட்டத்தில் 697 வீடுகள் முழுமையாகவும் 3224 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 351 குடும்பங்களை சேர்ந்த 1312 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 437 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர். கண்டி மாவட்டத்தில் 202 குடுங்களை சேர்ந்த 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் 249 குடும்பங்களை சேர்ந்த 764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 முகாம்களில் 764 பேர் தங்கியுள்ளனர்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் 3351 குடும்பங்களை சேர்ந்த 12158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் மடு நானட்டான் மாந்தை மேற்கு மன்னார் முசலி ஆகிய பகுதிகள் வெள்ளம் காரணமக்ஷிக பாதிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 451 குடும்பங்களை சேர்ந்த 59 ஆயிரத்து 977 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 616 குடும்பங்களை சேர்ந்த 2048 பேர் 4 முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த மாவட்டத்தில் துணுக்காய் , ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 3711 குடும்பங்களை சேர்ந்த 14827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 115 குடும்பங்களை சேர்ந்த 430 பேர் 7 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

சூரியனின் முழுப் முப்பரிமாண தோற்றம்: அதிசய படங்கள்



மனித வரலாற்றில் முதன் முறையாக சூரியனின் 360 பாகை அதாவது முழுப் முப்பரிமாண தோற்றத்தின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

நாசாவினால் கடந்த 2006 ஆம் ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட ஸ்டீரியோ எனப்படும் இரட்டை விண்வெளி ஓடங்கள் சூரியனுக்கு நேர் எதிராகப் பயணித்து இம் முப்பரிமாண படங்களை பதிவு செய்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

பெனாசிர் கொலை வழக்கில் முஷாரப்பின் பெயர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலையின் குற்றவாளி பெயர் பட்டியலில் முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

பெனாசிரின் கொலை வழக்கு தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் இன்று தாக்கல் செய்த தாற்காலிக குற்றப் பத்திரிகையில் முஷாரப்பின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராவல்பிண்டி நகரில் உள்ள தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முஷாரப் தற்போது பஹ்ரைன் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளுராட்சித் தேர்தல் அமைதியான முறையில் சுகந்திரமாக நடைபெற வேண்டும்: பெப்ரல்

பிரதேச சபைகளுக்கான உள்ளுராட்சித் தேர்தல்கள் சுகந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் என சுகந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் கண்கானிப்பு மத்திய நிலைத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோஹன ஹெட்டிஆராச்சி கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தேர்தல் அமைதியாக நடத்தும் பொறுப்பு தேர்தல் திணைக்களத்திற்கு மட்டுமல்ல பொலிஸ் திணைக்களம், அரசியற் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கும் உரியது.

தேர்தல் சட்டத்தை அனைத்துக் கட்சிகளும் பின்பற்ற வேண்டும். தேர்தல் நடவடிக்கைகள் கிராம மட்டத்தில் இடம்பெறவிருப்பதால் சூழலுக்கு பாதகமில்லாத முறையில் பிரசாரம் மேற்கொள்ளவேண்டும்’ எனவும் கேட்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பயணிகளின் அட்டகாசத்தால் சவூதி விமானம் இலங்கையில் அவசர தரையிறக்கம்

சவூதியிலிருந்து இந்தோனேசியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த விமானமொன்று இடைநடுவில் அவசரமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கட்கிழமை தரையிறக்கப்பட்டது.

அரேபியப் பயணிகள் மதுபோதையில் முறைகேடாக நடந்துகொண்டதால் நிலைமையை சமாளிக்க முடியாததால் விமானத்தைத் தரையிறக்கியதாக விமானி குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் விமானப் பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் தொந்தரவு கொடுத்துள்ளனர். அவ்வாறு நடந்துகொண்ட ஐவர் விமான நிலையப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை விமான நிலைய பொலிஸார் தீவிர விசாரணைக்குட்படுத்தியதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஒன்பதாம் திகதி ஆர்ப்பாட்டம்: ஐ.தே.க அறிவிப்பு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை எதிர்வரும் 9ஆம் திகதி நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் நிலவுகின்ற ஊழல், மோசடி மற்றும் பல்வேறு காரணங்களை முன்வைத்து கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை ஜே.வி.பி. எதிர்வரும் 8ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தவுள்ளதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியாவதையொட்டி இவ் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா ரூ.40 கோடி பெறுமதியான நிவாரண பொருட்கள்

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு ரூ.40 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்கி இருப்பதாக இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சட்டசபையில் நிதி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் கூறப் பட்டு இருப்பதாவது:

தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழர் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவதற்கு இந்த அரசால் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக ரூ. 30 கோடிக்கான பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இரண்டாம் கட்டத்திற் கான பணிகளைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் முதலான பல்வேறு திட்டங்களும், இந்த முகாம் களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உதவிகள் வழங்கப் பட்டு வருகின்றன.

இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாக தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கருத்தில் கொண்டு, ரூ.40 கோடிக்கான நிவாரணப் பொருட்களை இந்த அரசு வழங்கியது. மத்திய அரசும் இலங்கை தமிழர் நிவாரணப் பணிகளுக்காக, ரூ.500 கோடியை வழங்கியுள்ளது.

இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும், அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண் டும் என்றும் இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் தொடர்ந்து வேட்டையாடும் நிலையினைக்கண்டு, தமிழக அரசின் சார்பாக பல முறை மத்திய அரசுக்கு கோரிக்கைகளை வைத்து, மத்திய அரசும் இலங்கை அரசுக்கு எடுத்துக் கூறிய போதிலும், கடற்படையினர், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொட ர் ந்து மனிதாபிமானமற்ற செயலிலே ஈடுபட்டு, நமது மீனவர்களை கொன்று வருவதை நிறுத்தியபாடில்லை.

இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கப்படாமல், தமிழக மீனவர்கள் இனியும் கொல்லப்படும் நிலை வராமல் இருக்க இறுதி முடிவினை மத் திய அரசு எடுத்தே தீர வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது
மேலும் இங்கே தொடர்க...

சபையில் நிறைவேற்றப்பட்ட அவசரகால சட்டப் பிரேரணை மீதான விவாதம் நாளை

அவசரகாலச்சட்ட பிரேரணை மீதான விவாதம் 118 மேலதிக வாக்குகளினால் சபையில் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி நிறைவேற்றிக்கொள்ளப்பட்டபோதிலும் அந்த பிரேரணை மீதான விவாதம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும்.

பாராளுமன்றத்தின் ஜனவரி மாதத்திற்கான அமர்வு கடந்த 18 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் 18 ஆம் திகதியிட்டே கையொப்பமிட்டிருந்தார்.

அந்த வர்த்தமானி அறிவித்தல் 10 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதனால் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீது கடந்த 18 ஆம் திகதி விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது. அந்த பிரேரணை மீதான விவாதமே நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும்.

அன்றைய வாக்கெடுப்பின் போது பிரேரணைக்கு ஆதரவாக ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும், எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயகத் தேசிக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இதன் பிரகாரம் பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 05 வாக்குகளும் கிடைத்தன.

இதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற குழுக்கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரிமாளிகையிலும், ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற குழுக்கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியிலும் இன்று திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி நாளை சத்தியாக்கிரகம்

சிறைவைக்கப்பட்டுள்ள சரத்பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நாளை 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு மகஸின் சிறைச்சாலை முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் அறிவித்தார்.

இப்போராட்டத்தில் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் பகிரங்க அழைப்பு விடுத்தார்.

பெலவத்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே விஜித ஹேரத் எம்.பி. இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இப்போராட்டமானது ஜே.வி.பி.க்காக செய்யப்படவில்லை. நாட்டு மக்களின் நன்மைக்காக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படவுள்ளது. எமது நாட்டின் 63ஆவது சுதந்திர தினத்தன்று சுதந்திரமாக ஜனநாயகப் பேரணியை நடாத்த முடியாதுள்ளது. ஐ.தே.கட்சி பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசாங்கத்தின் குண்டர்களே இதனை நடத்தினர்.

எனவே, நியாயமான விசாரணைகளை எதிர்பார்க்க முடியாது. குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்படமாட்டார்கள்.

ஊடக நிறுவனங்கள் தீ வைக்கப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றனர். இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை. அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச்செயல்களை முழு உலகமே இன்று புரிந்துகொண்டுள்ளது.

இதனை தொடர இடமளிக்க முடியாது. எனவே, பொதுமக்கள் அச்சமின்றி போராட்டங்களுக்கு முன்வர வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்திற்கு வழிவகுத்த தவறுகளை இலங்கை கருத்திற்கொண்டுள்ளது


நாட்டைத் துண்டிப்பதற்கான ஆயுதமேந்திய நீண்ட கால பிரிவினைவாதத்தை வெற்றி கொண்டமை குறித்து இலங்கை பெருமையடைகிறது. ஆனால் 30 வருட கால யுத்தத்திற்கு வழி வகுத்த கடந்த கால தவறுகள், இடைவெளிகள் முரண்பாடுகள் குறித்தும் இலங்கை கவனம் செலுத்துகிறது என பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.

ஆயுதப் போராட்டத்தையும் பாரியளவிலான வன்முறைகளையும் நிரந்தர சமாதானமாக மாற்றும் சிக்கலானதும் கடினமானதுமான செயற்பாட்டில் இலங்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.

இத்தகைய சமாதானம் மக்களின் மனதிலேயே கட்டியெழுப்பப்பட முடியும். அது நீதி, சமத்துவம், ஜனநாயகம் என்பனவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும் எனவும் கலாநிதி ஜயதிலக கூறினார்.

பாரிஸ் நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் 63 ஆவது சுதந்திர தின வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவ் வைபவத்தில் இந்தியா, கியூபா, வெனிசுலா, ஜப்பான், நேபாளம், பிலிப்பைன்ஸ், ஜேர்மனி, வத்திக்கான், ஸ்லாவாக்கியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும் அமெரிக்கா, மலேசியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, கெமரூன், செனகல், கஸகஸ்தான், வியட்நாம், குவைத் ஆகிய நாடுகளின் பதில் தூதுவர்கள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புளொட் தொடர்ந்தும்


- மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும்மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு படகுகளில் கொண்டு செல்;வதற்கும், மக்களின் அத்தியாவசிய போக்குவரத்துக்கும், மருத்துவப் பணிகளுக்கும் புளொட் உறுப்பினர்கள் உதவி வருகின்றனர். புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர் திரு.கேசவன் உட்பட 30ற்கும் மேற்பட்ட புளொட் உறுப்பினர்கள் ஆறு நாட்களாக நான்கு இயந்திரப்படகுகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லுதல், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவர்களை அழைத்துச் செல்லுதல், நோயாளர்களை மட்டக்களப்பு மற்றும் நாவற்காடு வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, நாவற்காடு, வவுணதீவு, கரவெட்டி, கன்னங்குடா, சேத்துக்குடா, புதூர், ஈச்சந்தீவு, குறிஞ்சாமுனை, காரையாக்கன்தீவு, கொத்தியாவளை ஆகிய பிரதேசங்களிலேயே புளொட் உறுப்பினர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வவுணதீவு, காளைபோட்டமடு, ஊத்துமடு, பாவற்கொடிச்சேனை ஆகிய இடங்களிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு 1000ற்கும் மேற்பட்ட சமைத்த உணவுப் பொதிகளையும் இன்றையதினம் புளொட் உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர். அத்துடன் நோய்வாய்ப்பட்ட நிலையில் மட்டுக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமான ஒருவரின் சடலத்தினையும் இன்று பொறுப்பேற்று இயந்திரப் படகின்மூலம் கன்னங்குடா பகுதியிலுள்ள மரணமானவரின் குடும்பத்தினரிடம் புளொட் உறுப்பினர்கள் கையளித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...