Sep 26, 2010

இலங்கை வடக்கில் உள்ளாட்சித் தேர்தல்

கொழும்பு, செப்.26: இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் தேர்தலை நடத்துவது குறித்து அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.

30 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கு மாகாணக் கவுன்சிலுக்கு தேர்தல் நடக்கவுள்ளது.

இதை அந்நாட்டின் செய்தித்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புகவெல்ல ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியது: வடக்குப் பகுதியில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களில் 90 சதவீதம் பேர் அவர்களது சொந்த ஊர்களிலேயே மறு குடியமர்த்தப்பட்டுவிட்டனர். இன்னும் 10 சதவீதம் பேர் முகாம்களில் தங்கியியுள்ளனர். அவர்களையும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 சதவீதம் பேரும் விரைவில் மறுகுடியமர்த்தப்படுவர்.

இந்த பணி நிறைவடைந்ததும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் வடக்கு மாகாணக் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்தப்படும். வடக்குப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அப்பகுதி உள்ளாட்சி அமைப்பு 30 ஆண்டுகளாகச் செயல்படவில்லை. முடங்கிக்கிடந்தது. வடக்குப் பகுதியில் தேர்தல் நடைபெறாததால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வாக்குரிமை நசுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வடக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடத்துவதன் மூலம் அப்பகுதியின் உள்ளாட்சி அமைப்பு புத்துயிர் பெறவுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ஜனநாயகம் நிலைநாட்டப்படவுள்ளது. இத்தேர்தலில் நிச்சயம் மக்களின் உணர்வுகள் பிரதிபலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாகாணத் தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் வெளியே சுதந்திரமாக வந்து அச்சமின்றி வாக்களிக்கலாம். அவர்கள் தேர்தல் மூலம் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் என்று கெஹெலிய ரம்புகவெல்ல தெரிவித்தார்.

""வடக்குப் பகுதியில் 2009-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் யாரது பெயரெல்லாம் இருந்ததோ, அவை அப்படியே இருக்கின்றன. யார் பெயரும் நீக்கப்படவில்லை. இதனால் வாக்காளர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்று அந்நாட்டு தேர்தல் துணை ஆணையர் பி.எம். சிறிவர்தன் கூறினார்.

No comments:

Post a Comment